விபத்தில் காயம் அடைந்து தவித்த செய்தியாளர்! ஓடோடிச் சென்று ரத்தத்தை துடைத்து காப்பாற்றிய ராகுல்!

விபத்தில் காயம் அடைந்த செய்தியாளரை தனது காரிலேயே ஏற்றி அழைத்துச் சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று டெல்லி ஹுமாயூன் சாலையில் காரில் சென்றபோது, அங்கு நடந்து இருந்த விபத்தினால் காயம் அடைந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பத்திரிக்கையாளர் ராஜேந்திர வியாஸை தனது காரின் மூலம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். காரில் இருந்த போது பத்திரிக்கையாளரின் தலையில் ரத்தம் வழிந்தது. அப்போது ராகுல் காந்தி தனது கைக்குட்டையால் துடைத்து விட்டார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராகுலின் இந்த மனிதாபிமான செயலுக்கு பலரும் பராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மருத்துவமனைக்கு சென்ற பின்னரும் சிறிது நேரம் ராகுல் காத்திருந்தார். கடந்த ஜனவரியில் ராகுல் காந்தி ஒடிசா சென்ற போது, விமான நிலையத்தில் அவரை புகைப்படம் எடுப்பதற்காக நின்றிருந்த புகைப்பட கலைஞர் ஒருவர் திடீரென கீழே விழுந்தார். அவரை உடனடியாக ஓடிச்சென்று ராகுல் காந்தி தூக்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.