மீண்டும் வருகை தரும் ராகுல் காந்தி... 40 சீட் கேட்டு மிரட்டும் காங்கிரஸ்... திகிலில் தி.மு.க.

சட்டப்பேரவை தேர்தலையொட்டி, ராகுல்காந்தி இரண்டு முறை தமிழகத்திற்கு வந்து சென்றுவிட்டார். அதாவது, முதல் பயணமாக ஜனவரி மாதம் 14-ம் தேதி ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக மதுரை வந்தார்.


அதைத் தொடர்ந்து கடந்த 23, 24, 25-ந் தேதிகளில் அவர் முதல் முறையாக தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்தார். கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் என்று நான்கு மாவட்டங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரமும் மேற்கொண்டார்..இந்த மூன்று நாட்களில் மட்டும் ராகுல்காந்தி 25-க்கும் மேற்பட்ட இடங்களில் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்களை சந்தித்தார்

இந்த நிலையில், ராகுல்காந்தி மீண்டும் வருகிற 15-ம் தேதி தமிழகம் வருகிறார். இந்த முறையும் அவர் மூன்று நாட்கள் பிரச்சாரம் செய்ய தமிழக காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது.. விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த சுற்றுப்பயணம் அமைகிறது.

மேலும் விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மூன்று இடங்களிலும் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க இருப்பதால், அந்த தொகுதி முழுவதும் ராகுல் காந்தியின் பிரச்சாரம் நிச்சயம் இருக்கலாம்.

 “ராகுலுக்கு அவருடைய தந்தை ராஜீவ் காந்தி போலவே தமிழகத்தில் அபார செல்வாக்கு இருப்பதைக் கண் கூடாக காண முடிகிறது. எனவே கடந்த முறை திமுக எங்களுக்கு ஒதுக்கிய 41 தொகுதிகளை இந்த தேர்தலிலும் கேட்டுப் பெறுவோம். இதில் மிக உறுதியாக இருக்கிறோம். 1989ம் ஆண்டு தமிழகத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டபோது 28 இடங்களை கைப்பற்றியது.

எங்களுக்கு 20 சதவீத வாக்குகளும் கிடைத்தது. அப்போது தேர்தல் பிரச்சாரத்தில் ராஜீவ்காந்தி தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று காங்கிரசுக்கு ஆதரவு திரட்டினார். அதே பாணியில்தான் இன்று ராகுலின் பிரச்சார பாணியும் அமைந்திருக்கிறது.

காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டாலும் கூட 30 தொகுதிகள் வரை ஜெயிக்க முடியும். அதனால் 15, 20 சீட்டு என்று எங்களை ஏமாற்ற முடியாது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கும்போது நிச்சயமாக எங்களுடைய இந்த கோரிக்கையில் உறுதியாக இருப்போம்” என்று சற்று குரலை உயர்த்தி கூறினார், அந்த நிர்வாகி. காங்கிரஸ் தனது சொந்த பலத்தை நம்புவதால் திமுகவிடம் 41 தொகுதிகளை போராடி பெறுவதில் திட்டவட்டமாக இருப்பது தெரிகிறது.

இந்த திடீர் போர்க்கொடி திமுகவுக்கு திகைப்பையும், எரிச்சலையும் ஒரு சேர ஏற்படுத்தி இருக்கிறதாம். காங்கிரஸை கழட்டிவிட்டு கமல்ஹாசனை சேர்க்கலாமா என்று யோசனை செய்துவருகிறார்களாம்.