ரஃபேல் விவகாரத்தில் ராகுல் எஸ்கேப்! மோடி செம ஜாலி!

அயோத்தி தீர்ப்பை அடித்துத் தூக்கியது போலவே ரஃபேல் விவகாரத்திலும் மோடியின் அரசுக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. இந்த விஷயத்தில் ராகுல் காந்திக்கு அறிவுரை மட்டுமே வழங்கிய நீதிமன்றம், தண்டனை கொடுக்கவில்லை என்றதால் ராகுலும் ஜாலியாக இருக்கிறார்.


ரஃபேல் விமான கொள்முதலில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனு மீது இன்று இறுதித் தீர்ப்பு வெளியானது. 

அதற்கு முன்னதாக ரஃபேல் டீல் பற்றிய சிறு குறிப்பு இது. பிரான்ஸ் நாட்டிடம் இருந்து இந்தியா 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் போட்டது. என்ன விலை என்று வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்பதால், மோடி அரசு கொள்ளை அடிக்கிறது, மோடி ஒரு திருடன் என்று ராகுல் வெளிப்படையாக விமர்சனம் செய்தார்.

இந்த ஒப்பந்தம் குறித்து உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான மூன்று நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு கடந்த ஆண்டு டிசம்பர் 14ம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி மற்றும் மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண், வினீத் தண்டா, ஆம் ஆத்மி கட்சி தலைவர் சஞ்சய் சிங் ஆகியோர் மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோரைக்கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு வெளியிட்டது. சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஃபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் இல்லை என்று மோடி அரசுக்கு சர்டிஃபிகேட் கிடைத்துள்ளது.

ரஃபேல் வழக்கில் மோதியை நீதிமன்றம் 'திருடன்' என்று கூறிய ராகுல் காந்தி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. பின்னர் தனது கருத்திற்கு உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் ராகுல். இதுகுறித்து, ‘இனி ராகுல் காந்தி பொறுப்பை உணர்ந்து எச்சரிக்கையுடன் பேச வேண்டும்’ என்று அறிவுரை தெரிவித்து, அவரையும் விடுவித்தனர்.

ஆக, டெல்லி இன்று செம ஹேப்பி.