இலங்கையில் ராதிகா தங்கியிருந்த ஓட்டலிலும் குண்டுவெடிப்பு! நூலிழையில் உயிர் தப்பியதாக அதிர்ச்சி தகவல்!

இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் தான் நூல் இழையில் உயிர் தப்பியதாக நடிகை ராதிகா கூறியுள்ளார்.


இலங்கையில் இன்று காலை கொழும்பு மற்றும் மட்டகளப்பு பகுதிகளை குறி வைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 100 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியானது. இந்த நிலையில் கொழும்புவில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த ஓட்டல் ஒன்றில் இருந்து நடிகை ராதிகா நூலிலையில் தப்பியுள்ளார்.

திரைப்பட படப்பிடிப்பிற்காக நடிகை ராதிகா கொழும்பு சென்றுள்ளார். அங்குள்ள சின்னாமோகிராண்ட் எனும் நட்சத்திர ஓட்டலில் அவர் உள்ளிட்ட படப்பிடிப்பு குழுவினர் தங்கியிருந்தனர். இந்த நிலையில் காலை எட்டு நாற்பத்து ஐந்து மணி அளவில் அந்த ஓட்டலில் குண்டு வெடித்தது. இதில் பலர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் தான் தற்போது தான் சின்னாமோகிராண்ட் ஓட்டலில் இருந்து வெளியே வந்ததாக நடிகை ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தான் தங்கியிருந்த ஓட்டலில் குண்டு வெடித்ததை அறிந்து ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து தன்னால் மீளமுடியவில்லை என்று ராதிகா தெரிவித்துள்ளார்.

கடவுள் தன்னுடன் இருப்பதால் தான் தன்னால் உயிர் தப்ப முடிந்ததாகவும் ராதிகா கூறியுள்ளார். இதனை அடுத்து விரைவாக அவர் இந்தியா திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.