பெண்களை காக்கும் வகையில் வரதட்சணை கொடுமைக்கு தண்டனை கூடியாச்சு.! எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த சிறப்பு சட்டத் திருத்தம்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான நலம் பேணி, அவர்களின் உரிமைகளையும், பாதுகாப்பினையும் உறுதிபடுத்தும் வகையில் பல்வேறு சட்டத்திருத்தங்களை இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி இருக்கிறார்.


இதுகுறித்து இன்று வெளியான அறிவிப்பு இது. சென்னை காவல் எல்லைக்குட்பட்ட 35 அனைத்து காவல் நிலையங்களுக்கும் நவீன வசதிகள் பொருத்திய ஊர்திகள், நிர்பயா நிதியின் கீழ் வழங்கப்பட்ட அம்மா ரோந்து வாகனம் மூலம் ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவற்றின் வாயிலாக பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான குற்றச் செயல்கள் தடுக்கப்பட்டு வருவதுடன், அவர்கள் nghij பொருட்களுக்கு அடிமையாதல் மற்றும் குழந்தை திருமணம் ஆகியவற்றை தடுக்க விழிப்புணர்வு பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள் குண்டர்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமின்றி, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக காவலன் செயலி, மகளிர் உதவி எண் 181, குழந்தைகளுக்கான உதவி எண் 1098 போன்றவையும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு, குற்றங்கள் தடுக்கப்பட்டுள்ளன. 

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பினை மேலும் உறுதி செய்வதற்கு மாண்புமிகு அம்மாவின் அரசு, 1860-ம் ஆண்டைய இந்திய தண்டனைச் சட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையை மேலும் கடுமையாக்கிட மத்திய அரசின் அனுமதி பெற்று கீழ்க்கண்ட சட்டத் திருத்தங்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கும்.  

* பிரிவு 304-பி-யில் வரதட்சணை தொடர்பான மரணங்களுக்கு தற்போது வழங்கப்படும் குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையை, குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் தண்டனையாக வழங்குதல், 

* பிரிவு 354-பி-யில் குற்ற நோக்கத்துடன் (பெண்களின் ஆடைகளைக் களைதல்) செயல்படுவதற்கு தற்போது வழங்கப்படும் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை, குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளாகவும், அதிகபட்சமாக வழங்கப்படும் 7 ஆண்டுகள் சிறை தண்டனையை கடுமையாக்கி பத்தாண்டுகளாகவும் வழங்குதல், 

* பிரிவு 354-டி-யில் தவறான குற்ற நோக்கத்துடன் பெண்களை பின்தொடர்ந்தால், இரண்டாம் முறையும், தொடர்ந்தும் குற்றமிழைத்தால் தற்போது வழங்கப்படும் ஐந்தாண்டுகள் சிறை தண்டனையை, அதிகபட்சமாக ஏழு ஆண்டுகளாக்கவும், 

* பிரிவு 372ல் பாலியல் தொழிலுக்காக 18 வயதுக்குட்பட்ட நபர்களை விற்பனை செய்தல் மற்றும் பிரிவு 373ல் பாலியல் தொழிலுக்காக 18 வயதுக்குட்பட்ட நபர்களை விலைக்கு வாங்குதல், தற்போது வழங்கப்படும் அதிகபட்சமான பத்தாண்டுகள் வரையிலான சிறை தண்டனைக்கு பதிலாக, குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், அதிகபட்சம் ஆயுள் தண்டனையும் வழங்குவதற்கு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.