மாதம் ரூ.4 ஆயிரம் தான்! வீட்டு பணிப் பெண்ணுக்கு வரும் ஆயிரக்கணக்கான செல்போன் அழைப்பு! காரணம் இது தான்!

புனே: விசிட்டிங் கார்டு போட்டு அசத்திய பெண்ணிற்கு வீட்டு வேலை ஆஃபர்கள் நிறைய குவிய தொடங்கியுள்ளன.


மகாராஷ்டிரா மாநிலம் புனே, பாவ்தான் பகுதியை சேர்ந்தவர் கீதா காலே. இவர் வீட்டு  வேலை செய்து வருகிறார். இந்நிலையில், அவர் வேலைக்குச் செல்லும் இடத்தின் உரிமையாளர் தனஸ்ரீ என்பவர் பிராண்டிங் வேலை செய்கிறார். ஒருநாள் எதோ விசயமாக கீதாவை தேடிய தனஸ்ரீ, அவர் சோகத்தில் வாடியிருப்பதைக் கண்டுள்ளார். காரணம் கேட்டபோது, ஒரு இடத்தில் வீட்டு வேலையை விட்டு நிறுத்திவிட்டதாகவும், இதனால் தனக்கு மாத வருமானத்தில் ரூ.4 ஆயிரம் நஷ்டம் எனவும் கூறியிருக்கிறார்.  

உடனடியாக, பிராண்டிங் மூளையை கசக்கி யோசித்த தனஸ்ரீ, கீதாவுக்கு உதவும் வகையில் விசிட்டிங் கார்டு ஒன்றை தயாரித்துள்ளார். அந்த விசிட்டிங் கார்டை ஃபேஸ்புக்கில் தனஸ்ரீ பகிர அது இந்தியா முழுக்க பரவலாக, தற்போது கீதாவுக்கு வீட்டு வேலை வாய்ப்புகள் குவிய தொடங்கியுள்ளன.

அந்த விசிட்டிங் கார்டில் அப்படி என்ன இருக்கு என்கிறீர்களா? கீதாவின் பெயர், ஃபோன் நம்பர் மற்றும் ஆதார் எண் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டுவிட்டு, அதன் கீழே, பாத்திரம் கழுவ, துணி துவைக்க, சமைக்க, வீட்டை சுத்தம் செய்ய என ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு கட்டணம் என்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

இதனை பார்த்துவிட்டு, இப்படி ஒரு ஐடியா யாருக்கும் வராமல் போச்சே என பலரும் வியந்துள்ளனர்.  பொதுவாக, பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்தான் விசிட்டிங் கார்டு வைத்துக் கொண்டு சீன் போடுவார்கள் என்ற பிம்பத்தை தகர்த்துள்ளதோடு, வீட்டு வேலை செய்பவர்களும் தகுதி படைத்த மனிதர்கள்தான் என நிரூபித்துள்ளார் இந்த பிராண்டிங் மேனேஜர்.