உழைத்தால் மட்டும் போதாது! வாழ்வில் உயர இந்த ஒன்று மிகவும அவசியம்!

கடலின் அலையும், நகரும் நேரமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்பார்கள். யாரிடமும் வாங்க முடியாத, யாருக்கும் கொடுக்க முடியாத ஓர் உன்னதப் பொருள் ‘நேரம்’.


மூன்று மணி நேரம் சீக்கிரமாகச் செல்வது, ஒரு நிமிடம் தாமதமாகப் போவதை விட மிகச் சிறந்தது’ என்கிறார் ஷேக்ஸ்பியர்.  நேரம் தவறாமை ஒரு சின்ன விஷயம் போலத் தோற்றமளித்தாலும், பாறையைப் பிளக்கும் உளி போன்ற வலிமை அதற்குண்டு. உங்களுக்காக யாரும் காத்திருப்பதும் நல்லதல்ல, யாருடைய நேரத்தையும் நீங்கள் வீணடிப்பதும் நல்லதல்ல. காலம் தவறாமை சொல்லும் இன்னொரு செய்தி, ‘நீங்கள் அந்த சந்திப்பை முக்கியத்துவம் வாய்ந்தது’ என்று நினைக்கிறீர்கள் என்பது தான்

காலம் தவறாமை உங்களை நம்பிக்கைக்குரிய நபராய் அடையாளம் காட்டும். சொன்ன நேரத்தில் வருவது, சொன்ன நேரத்தில் வேலையை முடித்துக் கொடுப்பது, ஒப்புக் கொண்ட நேரத்தை மதிப்பது இவை எல்லாம் உங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும். நெப்போலியன் ஒருமுறை தன்னுடைய படைத் தளபதிகளை ஒன்று கூட்டி அருமையான பகல் விருந்து வைக்கவும், அதைத் தொடர்ந்து அடுத்த யுத்தத்திற்கான கலந்தாலோசனை நடத்திடவும் விரும்பினான். 

அதன்படி, விருந்து 12 மணிக்குத் தொடங்கி, தொடர்ந்து 12.15க்கு ஆலோசனைக் கூட்டம் நடக்க இருப்பது என்றும் , அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று தளபதிகளுக்கு அறிவிக்கை அனுப்பினான். ஆனால், 12 மணி அடித்த போது உணவுக் கூடத்தில் மன்னன் மட்டுமே அமர்ந்திருந்தான். கச்சிதமான நேரவுணர்வு கொண்ட நெப்போலியன் 12.01க்கு தனியாகவே விருந்தைத் துவங்கிச் சாப்பிடலானான்.

12.05ல் இருந்து ஒவ்வொரு தளபதியாக வரத் துவங்கினர். அவர்களைக் காத்து இருக்கச் செய்த மன்னன், உண்டு முடித்துச் சரியான நேரத்தில் ஆலோசனைக் கூடத்தில் நுழைந்தபடியே `நல்லது நண்பர்களே விருந்து முடிந்தது. இனி ஆலோசனையைத் தொடங்குவோம்’ என்றான். காத்திருந்த தளபதிகளுக்கோ, குறித்த நேரத்தில் வந்து இருந்தால் விருந்தை ஒரு பிடி பிடித்திருக்கலாமே என்கிற வருத்தம் ஏற்பட்டது. 

ஆம்.,நண்பர்களே.., ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ள வகையில், நமக்கும், சமுதாயத்திற்கும் நன்மை தரும் வகையில் கழிப்பது நமது கடமையாகும்.  உங்களது வேலையை சரியான நேரத்தில் வழக்கம் போலவே செய்யுங்கள். இறுதியாக, யாருக்காகவும் காத்திருந்து உங்களது நேரத்தை வீணாக்காதீர்கள்.