ரூ.200க்கு ஆன்ட்ராய்டு செல்போன்! வலை விரித்த சங்கீதா! நம்பிச் சென்றவர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்!

புதுக்கோட்டை: சங்கீதா செல்ஃபோன் கடை திறக்க காத்திருந்த மக்களுக்குள் சண்டை நிகழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களில் சங்கீதா என்ற நிறுவனம் செல்ஃபோன் விற்பனை மையங்களை நிர்வகித்து வருகிறது. இந்நிறுவனம், புதுக்கோட்டையில் புதியதாக செல்ஃபோன் கடை ஒன்றை திறக்க உள்ளதாகவும், திறப்பு விழா சலுகையாக 200 ரூபாய்க்கு செல்ஃபோன் தருவதாகவும் அறிவித்திருந்தது.

இதையடுத்து, காலை முதலே புதுக்கோட்டை பொதுமக்கள் பலரும் அந்த கடையின் முன்பு வரிசையில் காத்திருக்க தொடங்கினர். கூட்டம் அதிகமாக இருந்ததால், 10 பேருக்கு மட்டுமே 200 ரூபாயில் செல்ஃபோன் தர முடியும் என்றும், மற்றவர்களுக்கு தர முடியாது என்றும் சங்கீதா நிறுவன ஊழியர்கள் தெரிவித்தனர். 

அதிகாலை முதலே சோறு, தண்ணி இல்லாமல் காத்திருந்த பொதுமக்கள், இந்த தகவலை கேட்டதும் கடும் கோபம் அடைந்தனர். உடனே ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்ய தொடங்கினர். இதனால், கடைக்குள் பதற்றம் நிலவிய நிலையில், திடீரென கடைக்கு வெளியே ஒரு கும்பல் வந்து போராட்டம் நடத்துவதாக, கோஷமிட்டனர். புதுக்கோட்டை மாவட்ட செல்ஃபோன் கடை உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த அவர்களின் போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

ஒரே நேரத்தில் இரு பக்கமும் ஏற்பட்ட பிரச்னையால் சங்கீதா நிறுவனத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு, நீண்ட நேரம் போராடி இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். தொடக்க நாளிலேயே இத்தகைய பரபரப்பு நிகழ்ந்ததால், சங்கீதா நிர்வாகம் அதிருப்தி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.