ஒரு கையில் ஸ்டியரிங்! மறு கையில் காதலியுடன் சாட்டிங்! 50 பேர் உயிரோடு விளையாடி அரசுப் பேருந்து டிரைவர்!

புதுக்கோட்டை: வாட்ஸ்அப்பில் சாட்டிங் செய்தபடி 20 கிமீ தூரம் பஸ் ஓட்டிச் சென்ற டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


ஆலங்குடியை சேர்ந்த மூக்கையா, புதுக்கோட்டை அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக பணிபுரிகிறார். வழக்கம்போல, நேற்று புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் ரூட்டில் பேருந்தை ஓட்டிச் சென்ற மூக்கையா, திடீரென நடுவழியில் செல்ஃபோனை எடுத்து பார்த்துள்ளார்.

எதோ அவசர வேலை போல என பயணிகள் நினைத்த நிலையில், போனை திரும்பவும் பாக்கெட்டில் வைக்காமல், ஒரு கையில் ஸ்டியரிங் பிடித்தபடி, மறு கையில் போனை நோண்ட தொடங்கியுள்ளார் மூக்கையா. இதில், பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இப்படியே சுமார் 20 கிமீ தூரம் மூக்கையா செய்திருக்கிறார்.

உயிரை கையில் பிடித்துக் கொண்ட பயணிகள், அதிர்ச்சியின் உச்சத்தில் மூக்கையாவின் செயலை வீடியோ எடுத்து, சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர். இந்த செயலை பார்த்த பொதுமக்களும், போக்குவரத்துக் கழக அதிகாரிகளும் செய்வதறியாது திகைத்தனர். 

இதையடுத்து, விசாரணை மேற்கொண்ட புதுக்கோட்டை மண்டல அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள், உடனடியாக, டிரைவர் மூக்கையாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். நீண்ட தூரம் இப்படி அஜாக்கிரதையாகச் செயல்பட்டதன் மூலமாக, பயணிகள் உயிரை அச்சுறுத்திய டிரைவர் மூக்கையாவுக்கு சமூக ஊடகங்களில் கண்டனம் குவிந்து வருகிறது.