குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெறக் கோரி சென்னை, வண்ணாரப்பேட்டையில் பெண்கள் திரண்டு முப்பது நாள்களுக்கும் மேல் அமைதிவழிப் போராட்டம் நடத்திவருகிறார்கள்.
ஸ்டாலின் கோரிக்கையை நிராகரித்த போராட்டப் பெண்கள்!

32ஆவது நாளான நேற்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அங்கு சென்று போராட்டத்துக்கு இணக்கப்பாடு தெரிவித்தார். அவர்களிடையே பேசிய ஸ்டாலின், “ நியாயமாக இதைத் தொடங்கிய நேரத்திலேயே உங்களை நான் சந்தித்து வாழ்த்துகள் சொல்லி இருக்க வேண்டும்.
இந்தப் போராட்டத்தை தி.மு.க.தான் தூண்டிவிடுகிறது என்ற ஒரு தவறான பிரச்சாரத்தை - உங்களுடைய போராட்டத்திற்கு உள்நோக்கம் கற்பிக்கக்கூடிய வகையில், ஆட்சியாளர்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு இடம் தந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் உங்களைச் சந்திப்பதை தவிர்த்துவந்தேன்.
நான் தவிர்த்து வந்தாலும், தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்து ஆதரவு தந்திருக்கிறார்கள். நான்கு நாட்களுக்கு முன்பு மண்ணடி பகுதிக்கு நான் சென்றேன். உங்களைப் போலவே அவர்களும் ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இது வண்ணாரப்பேட்டை, மண்ணடி என்று சென்னை - தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் கிளர்ந்து எழுந்து இந்தப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நம்முடைய மொழிக்கு ஏற்பட்ட பிரச்னையில், நாடே கிளர்ந்து எழுந்தது. அதனால்தான் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தற்போது நம்முடைய உரிமைக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு - சோதனைக்கு முடிவுகட்டுவதற்காக நாடு முழுவதும் இந்தப் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இங்கே மக்கள் ஒன்று திரண்டிருப்பதைப் பார்க்கும்போது, இதற்குக் காரணமானவர்களுக்கு உரிய மாற்றம் வரத்தான் போகிறது என்பது உறுதி.
கரோனா தொற்று காரணமாக, உங்களுடைய போராட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைக்க வேண்டும் என்று நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.” என்று ஸ்டாலின் பேசினார். அதற்கு பதிலளித்த போராட்டக்களப் பெண்களின் பிரதிநிதிகள், சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரும்வரை தங்களின் போராட்டம் நிற்காது என்று கூறிவிட்டனர்.