அரசு ஆசிரியர்ன்னா கேவலமா? ஜோதிகாவுக்கு எதிராக கொந்தளிப்பு!

அரசுப் பள்ளியின் வீழ்ச்சிக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள்தான் காரணம் என்று ராட்சசி படத்தில் ஆவேசமாக வசனம் பேசியிருக்கும் ஜோதிகாவுக்கு எதிராக ஆசிரியப் பெருமக்கள் கொந்தளிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.


ஒரு தனியார் பள்ளியின் முதலாளியைவிட, ஒரு காவல்துறை அதிகாரியை விட அரசுப் பள்ளி ஆசிரியர் இரக்கமற்ற இழிபிறவி என்றும், அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க இயலாமல் போவதற்கு ஆசிரியர்கள்தான் காரணம் என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. ஒரு தமிழாசிரியர் மாணவர்களை இலக்கிய போட்டிக்கு அழைத்துச் செல்வதற்கு ஆர்வம் காட்ட காரணம் ஒருநாள் லீவும் பணமும்தான் காரணமாம் இதைவிட ஆசிரியர்களை கேவலப்படுத்த என்ன இருக்கிறது. கொஞ்சமாவது பள்ளிக்குள் வந்து கள ஆய்வு செய்து படம் எடுக்கவேண்டும்.

ஆசிரியர் போராட்டங்களை அரசு ஒடுக்கிய போது போராட்டத்தை என்ன சொல்லி ஒடுக்கியதோ அதையே வசனமாக வைத்து கைதட்டல் வாங்குவது சரியல்ல, உண்மையை அறிய முயலவேண்டும் என்கிறார்கள். வழக்கம்போல் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்கவில்லை என்று ஒப்பாரி வைக்கிறீர்கள்.  ஒரு அரசு மருத்துவர் தன்னுடைய மகனுக்கு அரசு மருத்துவமனையில் தான் மருத்துவம் பார்க்க வேண்டும் என்று சொல்வீர்களா?

அரசியல்வாதியின் பிள்ளைகள் அரசு பள்ளியில் படிக்க வேண்டும் என்று சொல்வீர்களா? கொஞ்சம் கொஞ்சமாக கல்வித்துறையை தனியார் மயமாக்கி வரும் அரசின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்ப உங்களுக்கு தைரியம் இருக்கிறதா எந்த அடிப்படையும் இல்லாமல் போகிற போக்கில் ஏன் ஆசிரியர்கள் மீது சேற்றை வாரி இறைக்கிறீர்கள்.

எல்லா மனிதர்களையும் போலவே இந்த அமைப்பிற்குள் சில ஆசிரியர்களும் விதிவிலக்காக தங்கள் கடமையை சரிவர செய்யாமல் இருக்கலாம் அதை கண்டிக்க வேண்டியது மறுப்பதற்கில்லை ஆனால் இந்த அமைப்பின் சீரழிவுக்கு ஆசிரியர்கள் தான் காரணம் என்பது போல படம் முழுவதும் காட்டப்படுவது எந்த வகையில் நியாயம்? என்று கேள்வி எழுப்புகிறார்கள். இந்தக் கேள்வி எல்லாம் ஆசிரியர்கள்தான் எழுப்புகிறார்களா அல்லது தியேட்டரில் படம் ஓடவில்லை என்று ஜோதிகாவே ஆள் வைத்து எழுப்புகிறாரா என்பதையும் நாம் பார்க்கத்தான் வேண்டும்.