அடுத்தடுத்து சொத்துகளை விற்பனை செய்யும் அம்பானி..! கடனை அடைக்க ஏற்பட்ட பரிதாப நிலை!

மும்பை: பிரபல தொழிலதிபர் அனில் அம்பானி, தனது சொத்துகளை விற்று கடன் அடைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.


இந்தியாவின் வர்த்தகமே அம்பானியின் கையில்தான் என்று சொல்லும் காலம் இது. அதற்கேற்ப, முகேஷ் அம்பானி, இந்தியாவையே தனது கைப்பிடிக்குள் அடக்கும் அளவுக்கு, எண்ணற்ற வர்த்தகப் பணிகளை நடத்தி வருகிறார். ஆனால், அவரது சொந்த சகோதரர் அனில் அம்பானி, பெரிய கடனாளி ஆகி, அல்லல்படும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.  

ஆம். அவருக்குச் சொந்தமான ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனம், ஜப்பான் நாட்டை சேர்ந்த நிப்பான் லைஃப் இன்சூரன்ஸ் உடன் சேர்ந்து, ரிலையன்ஸ் நிப்பான் லைஃப் அசெட் மேனேஜ்மெண்ட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், கடன் சுமை காரணமாக, ரிலையன்ஸ் கேபிடல் கைவசம் உள்ள பங்குகளில் மேலும் 21.54% பங்குகளை நிப்பான் நிறுவனத்திற்கே விற்றுள்ளது. இதற்காக, ரூ.3,030 கோடி பேரம் பேசப்பட்டிருக்கிறது.  

இந்நிலையில், தற்போது மேலும் ஒரு பேரம் நிப்பான் லைஃப் இன்சூரன்ஸ் உடன் ரிலையன்ஸ் கேபிடல் பேசியுள்ளதாம். தன் கைவசம் உள்ள ரிலையன்ஸ் நிப்பான் லைஃப் அசெட் மேனேஜ்மெண்ட் பங்குகளில், மேலும் 4.28% பங்குகளை, நிப்பான் நிறுவனத்திடமே விற்க, தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக, ரூ.700 கோடி பணம் ரிலையன்ஸ் கேபிடலுக்கு தரப்படும் என தெரிகிறது.  

ஏற்கனவே, இதேபோல, பங்கு விற்பனை செய்து, ரூ.2,480 கோடியை ரிலையன்ஸ் கேபிடல் திரட்டியுள்ளது. தற்போதைய பங்கு விற்பனையும் நிறைவடைந்தால், கூடுதலாக, ரூ.3700 கோடி பணம் கிடைக்கும். ஆக மொத்தம், ரூ.6000 கோடி பணத்தை வைத்து தனக்குள்ள கடன்கள் பலவற்றை அடைக்க, ரிலையன்ஸ் கேபிடல் திட்டமிட்டுள்ளது.  

தற்சமயம், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்திற்கு ரூ.17,000 கடன்சுமை உள்ளது. இதில், 70 சதவீத கடனை அடுத்த நிதியாண்டிற்குள் அடைக்க, இந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.