தாய்ப்பால் புகட்டுதல்! இந்து குழந்தைக்கு முஸ்லீம் தாய்..! முஸ்லீம் குழந்தைக்கு இந்து தாய்..! தொட்டுத் தொடரும் ஒரு நெகிழ்ச்சி பாரம்பரியம்!

திருவனந்தபுரம்: இந்து - முஸ்லீம்கள் ஒரே தாய்ப்பால் குடித்து வளர்ந்தவர்கள்தான், என்ற புதிய கருத்தை கேரளாவைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.


சமீபத்தில் கேரளா முழுக்க ஓணம் பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அப்போது கேரளாவைச் சேர்ந்த  இஸ்லாமிய மதபோதகர் சிம்சருல் ஹக் ஹூத்வய் என்பவர், முஸ்லீம்கள் ஓணம் அல்லது மற்ற கிறிஸ்தவ பண்டிகைகளை கொண்டாடுவது தவறு எனக் கூறியிருந்தார். இது பழைய வீடியோவாக இருந்தாலும், தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 

இந்நிலையில், இந்த வீடியோவிற்கு பதிலடி தரும் வகையில் டெல்லி யுனிவர்சிட்டியில் வரலாறு பாடத்திற்கு அசிஸ்டென்ட் புரொஃபஸராகப் பணிபுரியும் யாசர் அராஃபத் என்பவர் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன்படி, மலபார் பகுதிகளின் வடக்கே உள்ள ஊர்களில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர் என்ற மத வேறுபாடு இன்றி பல பெண்களிடம் தாய்ப்பால் குடித்து வளர்ந்தவர்கள் பலரும் உள்ளதாகக் கூறியுள்ளார்.  

அதாவது, ''30, 40 ஆண்டுகளுக்கு முன்பு, ஒவ்வொரு வீட்டிலும் 10 முதல் 20 குழந்தைகள் இருப்பார்கள். அவ்வளவு பேருக்கும், அவர்களை பெற்ற பெண்ணால் தாய்ப்பால் தர முடியாது. எனவே, அண்டை வீட்டில் வசிக்கும் முஸ்லீம், இந்து, கிறிஸ்தவப் பெண்கள் யாரேனும் தாய்ப்பால் தருவார்கள்.

அதேபோல, அவர்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும் சுழற்சி முறையில் பக்கத்து வீட்டில் இருக்கும் மற்ற பெண்கள் தாய்ப்பால் தருவது வழக்கமாகும். இதனால், ஒரு ஊரில் உள்ள குழந்தைகள் அனைவரும் பல்வேறு தாய்மார்களின் தாய்ப்பால் குடித்து வளர்ந்தவர்களாக இருப்பார்கள். குறிப்பாக, இந்து, முஸ்லீம், கிறிஸ்தவ குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, ஒரே பெண் தாய்ப்பால் குடுத்திருப்பார்.

அந்த பெண் இந்துவாக, முஸ்லீமாக அல்லது கிறிஸ்தவராகக் கூட இருக்கலாம். இப்படி இந்த தாய்ப்பால் உறவு மிகப்பெரிய கதையாகும். அத்தகைய நெருங்கிய பந்தம் உள்ள இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்களை தற்போது கேரளாவில் உள்ள மதபோதகர்கள் சிலர் பிரிக்கப் பார்க்கிறார்கள். அவர்களின் நச்சு நிறைந்த மதவாத கருத்துகளை நம்பி இன்றைய தலைமுறையினர் ஏமாறக்கூடாது,'' என்று யாசர் அராஃபத் குறிப்பிட்டுள்ளார்.