பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கிய மாணவ, மாணவிகள்! தனியார் பள்ளிக் கூடத்தில் விபரீத நிகழ்ச்சி! அதிர வைக்கும் சம்பவம்!

பெங்களூரு: கர்நாடகாவில் பாபர் மசூதியை இடிப்பது போல நிகழ்ச்சி நடத்திய பள்ளிக்கு, பல தரப்பிலும் கண்டனம் எழுந்துள்ளது.


தக்‌ஷிண கன்னடா மாவட்டத்தின் கல்லாடிகா பகுதியில் ஸ்ரீ ராம வித்யகேந்திரா என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஒருவருக்குச் சொந்தமான இந்த பள்ளியில் சமீபத்தில் கலைநிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்று, பாபர் மசூதியை இடிப்பது போன்ற நிகழ்வை சித்தரித்துக் காட்டியுள்ளனர்.

இதற்கு புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி, மத்திய அமைச்சர் சதானந்த கவுடா உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். அவர்கள் முன்னிலையில், மாணவர்கள் பாபர் மசூதியை இடிப்பது போல நடித்துக் காட்ட, இதனை அவர்கள் பார்த்து ரசித்துள்ளனர். இந்த நிகழ்ச்சி பற்றிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.  

இதில், காவி உடை அணிந்த மாணவர்கள், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெய் என முழங்கியபடி நடிக்க, அவர்களுக்கு வர்ணனை அளிக்கும் நிகழ்ச்சி தொகுப்பாளர், ''ஹனுமானின் கோபத்தோடு, இதோ ஹனுமானின் பக்தர்கள் பாபர் மசூதியை இடிக்கிறார்கள், ஸ்ரீ ராமருக்கு ஜெய் சொல்லுங்கள்,'' என வெளிப்படையாக பேசுகிறார்.

இது இந்து பள்ளியாக இருந்தாலும் இப்படியா வெளிப்படையாக மத துவேஷ நிகழ்ச்சியை நடத்தி, மற்றவர்கள் மனதில் நஞ்சை விதைப்பது என, பலரும் காரசாரமாக விமர்ச்சித்து வருகின்றனர். அத்துடன், அரசியல் கட்சிகள் தரப்பில் குறிப்பிட்ட பள்ளி நிர்வாகத்திற்கு கண்டனம் குவிந்து வருகிறது.