இளைஞரின் இடுப்புக்குள் உடைந்த ஊசித் துண்டை வைத்து அனுப்பிய பிரைவேட் ஹாஸ்பிடல்..! காய்ச்சல் சிகிச்சைக்கு சென்றவருக்கு ஆப்பரேசன்! சென்னை திகுதிகு!

சென்னையில் காய்ச்சலுக்காக ஊசி போட்டுக்கொண்ட போது இளைஞரின் இடுப்பிலேயே ஊசி உடைந்துள்ளதை மறைத்து வீட்டிற்கு அனுப்பிய மருத்துவமனை மீது இளைஞரின் பெற்றோர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.


சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்தவர் தேவசகாயம் இவரது மனைவி மேரி இவர்களுக்கு ஜான் 20, என்ற மகன் உள்ளார். ஜான் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். கடந்த 23 ஆம் தேதி ஜானுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது இதையடுத்து சென்னையில் உள்ள கே எம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது மருத்துவரின் அறிவுரைப்படி ஊசி போட சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த செவிலியர் ஒருவர் ஜானுக்கு ஊசி போட்டுள்ளார்.

அப்போது ஜானின் இடுப்பில் ஊசி உடைந்து தங்கியுள்ளது. இதையடுத்து அதை கவனிக்காத செவிலியர் ஜானை வெளியில் அனுப்பியுள்ளார். வீட்டிற்கு சென்றதும் காய்ச்சல் குறைந்த நிலையில் ஊசி போட்ட இடத்தில் ஜானுக்கு வலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வலியை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஜான் கே எம் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரிடம் இது குறித்து கூறியுள்ளார்.இதையடுத்து ஐஸ் கட்டி வைத்தால் சரியாகிவிடும் என கூறி அவரை திருப்பி அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் ஐஸ் கட்டி வைத்தும் தீராத வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து கடந்த 2ம் தேதி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்தபோது அவரது இடுப்பில் ஊசி உடைந்து உள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து உடைந்து ஊசி செப்டிக் ஆகிவிடும் என கூறி அதை அறுவை சிகிச்சை மூலம் தான் வெளியில் எடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.

பின்னர் அறுவை சிகிச்சை மூலம் அவரது உடலில் உள்ள ஊசி துண்டை வெளியில் எடுத்துள்ளனர். இதே இடத்தில் அலட்சியமாக செயல்பட்ட கேஎம் மருத்துவமனை மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இளைஞரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கொடுங்கையூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பின்னர் மருத்துவமனையில் கொடுத்து அனுமதி சீட்டு மற்றும் எக்ஸ்-ரே நகல் போன்றவற்றை ஆதாரங்களாக காவல்நிலையத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் காவல்துறை ஆணையரிடம் இளைஞரின் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் இந்த மாதிரியாக அலட்சியமாக இருப்பது அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.