ரூ. 2 லட்சம் கொடுத்தால் கைதிகளுக்கு மேட்டர்! அம்பலமான புழல் சிறையின் அவலம்!

சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகளுக்கு சிறைத்துறை அதிகாரிகள் பணம் பெற்றுக்கொண்டு சலுகை வழுங்குவதாக தொடர் புகார் இருந்து வரும் நிலையில், அந்த குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் விதமாக 23 சிறை காவலர்கள் கையெழுத்திட்ட புகாரை தமிழக டிஜிபி மற்றும் சிறைத் துறை டிஜிபி -க்கு அனுப்பியுள்ளனர்.


தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் எப்போதும் சர்ச்சைகளோடு இயங்கும் சிறை  புழல் மத்திய சிறை. கைதிகள் தரப்பில் இருந்து புகார்கள் வரும் நிலையில், இம்முறை சிறைக் காவலர்களே கைதிகளுக்கு சொகுசு வாழ்க்கை ஏற்படுத்தித்தர அதிகாரிகளும், அவர்களுக்கு உடந்தையாக ஒரு சில காவலர்களும் லஞ்சம் வாங்கியதாக பரபரப்பு புகார் மனுவை அனுப்பியுள்ளனர். 
அந்தப் புகாரில் சிறைத்துறையில் இருக்கும் கீழ் நிலை காவலர்கள் இருந்து  உயர் அதிகாரிகள் வரை கைதிகளின் உறவினர்களிடம் 2 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிக்கொண்டு கைதிகளுக்கு சொகுசு வாழ்க்கை ஏற்படுத்தித் தருவதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சிறைத்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என புகாரில் தெரிவித்துள்ளனர்.
புழல் மத்திய சிறையில் உள்ள குட்கா ஊழலில் கைது செய்யப்பட்டவர்கள், தீவிரவாதிகள்,  ரவுடிகள் ,கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த முக்கிய புள்ளிகள் ஆகியோருக்கு இந்த சொகுசு வாழ்க்கையை பணம் பெற்றுக் கொண்டு சிறை காவலர்கள் செய்து தருவதாக அதே சிறையில் பணிபுரிந்து வரும் சில காவலர்கள் டிஜிபியிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்று ஊழல் புகார்களை விசாரிக்க சிறைத் துறையில் உள்ள விஜிலென்ஸ் காவலர்களும் இந்த ஊழலுக்கு உடந்தை என அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ரகசிய விசாரணை நடத்தினால் உண்மை வெளியே வரும் என காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறைத்துறை காவலர்கள் லஞ்சம் வாங்கியது தொடர்பாகவும் சொகுசு வாழ்க்கை ஏற்படுத்தியது. தொடர்பாகவும் வீடியோ ஆதாரங்களையும் சமர்ப்பிப்பதாக அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளனர். உயரதிகாரிகளின் கவனத்திற்கு இந்த முறைகேடு தொடர்பாக புகார் அளித்ததால் கைதிகளில் சிலர் தங்களுக்கு குறை கொலை மிரட்டல் விடுப்பதாகவும் இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் தங்களை பழி வாங்குவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறையில் நடக்கும் முறைக்கேடு தொடர்பாக கைதிகளின் சொகுசு வாழ்க்கை தொடர்பாக புகைப்படங்கள் வெளியாகியது. மேலும் சிறை வளாகத்திற்குள் தனியாக உணவு தயாரிக்கப்படும் காட்சிகளும் வெளியாகியது. இது தொடர்பாக உயர் அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்து பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்தனர்
அதோடு மட்டுமல்லாது சம்பந்தப்பட்ட காவலர்களையும் அதிரடியாக இடமாற்றம் செய்தனர். அதிரடி சோதனைகளும் பணியிட மாற்றமும் செய்யப்படும் சென்னை புழல் மத்திய  சிறையில் காவலர்கள் கைதிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு சொகுசு வாழ்க்கைக்கு வசதிகள் செய்து கொடுப்பதாக சிறை காவலர்கள் 23 பேர் கையெழுத்திட்ட புகார் மனுவை டிஜிபியிடம் அளித்துள்ளனர்.