மருத்துவர் கு.சிவராமன் கொரோனாவிடம் இருந்து எப்படி தப்புவது என்று விளக்கம் அளித்துள்ளார்..

மெல்ல மெல்ல கரோனாவின் தொற்று பெருகிவருகின்றது. இருந்தாலும் கூட, இப்போதும் கூட நோயின் தீவிரம் என்னவோ இன்னும் குறைந்த அளவில்தான் இருப்பதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.


இன்னும் கூட தொற்றுப்பெற்றவர்களில், சர்க்கரை நோயும் இரத்தக் கொதிப்பும் ஒன்றாய் பெற்றவர்களும் அதில் கட்டுப்பாடின்றி இருப்போரும், அந்த துணை நோய்பெற்றவரில் நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருப்போரும்தான் கோவிட் நோயின் குறிகுணங்களை பெறுகின்றனர். 85 விழுக்காடு தொற்று பெற்றவர் அறிகுறிகள் ஏதுமின்றி நலமாய் இருந்தே தொற்றில் இருந்து மீள்கின்றனர். 

தொற்று பெற்றோரில் 0.8% மட்டுமே உயிரிழப்பைப் பெறுகின்றனர் என்கிறது துறையின் அறிக்கை. இப்போது தொற்றுப்பெற்றோர் எண்ணிக்கை தினம் 1000க்கு மேலாக உயர்ந்து வருகையில் அந்த 0.8% மும் கூட இன்னும் வருகிற நாட்களில், மிக எச்சரிக்கையாக கவலை அளிக்க கூடிய எண்ணிக்கையாகவே இருக்கும். 

Asymptomatic எனும் தொற்றுப்பெற்றும் குறிகுணங்கள் இல்லாதவரும், அவர்களது ஆக்சிஜன் saturation சரியாக உள்ளதா? என்பதை pulseoxymeterஇல் சோதித்து கொள்வது நல்லது. Asymptomatic positivesஇல் சிலருக்கு திடீர் பிராணவாயு அடர்வுனிலை குறைபாடு ஏற்படுவதும் அவர்கள் அதை உணரமுடியாத happy hypoxia வில் இருப்பதையும் சில ஆய்வுகள் சொல்கின்றன.

நமக்கு தொற்று இருக்கிறதா? இல்லையா? என தெரியாமல் நலமுடன் இருப்போர் திடீர் நோய்ச்சிக்கலுக்கு ஆளாகாமல் இருக்க, உங்கள் குடும்ப டாக்டரிடம் அதன் அளவை பார்த்து 95-98% இருக்கின்றதா? என பார்த்துக் கொள்வதும் ஒருவகைக்கு நல்லதுதான். தொற்றுப் பெற்றோருக்கு அந்த அளவு கண்டிப்பாக பார்க்கப்பட வேண்டும். அது திடீர் தீவிர நிலை அடைவதை தவிர்க்க உதவிடும். 

நம் நாட்டில் 65 வயதுக்கு மேலுள்ள வயதினர் மிக குறைந்த விழுக்காடு என்பது ஆறுதலளிக்கும் சேதி. அதே சமயம், நம் நாட்டின் இளைஞர்கள் பிற நாட்டினர் போல வலுவான நோய் எதிர்ப்பாற்றல் உள்ளவர்கள் அல்லர். நம் நாட்டில் 40-50 வயதினரிலேயே பெரிய எண்ணிக்கையில் சர்க்கரை நோயும் இரத்தக் கொதிப்பு நோயினரும் அதிகம். ஆனால் இன்னும் சர்க்கரை இரத்தக் கொதிப்பு வாழ்வியல் நோய்களைத. துல்லியமாய் கணிக்கப்படாதவர்கள், தெரிந்தும் அதைப்பற்றி கவலைப்படாதவர்கள் கணிசமானவர்கள் என்பதெல்லாம் கொஞ்சம் கவலைதரக் கூடிய விஷயம். 

ஆனால் வெகுசன மக்கள் இடையே, முதலில் இருந்த எச்சரிக்கை உணர்வு கொஞ்சம் குறைந்து வருகிறது. சிலருக்கு எரிச்சல் உணர்வாக, சிலருக்கு அலட்சிய உணர்வாக, வெகு சிலருக்கு "ஒண்ணுஞ்செய்யாதுப்பா" என தவறான தகவலாக பெருகி வருவது வருந்தத்தக்க உண்மை. இப்படியான மன நிலையில், மக்களின் நகர்வு அடர்வு அதிகரிக்கையில், இனிதான் மெல்ல மெல்ல முதியோரையும் சர்க்கரை முதலான துணை நோயினரையும் நோய் பாதிக்கும் வாய்ப்பும் நிலை கூடும்.

கோயம்பேட்டைத் தவறவிட்டதுதான் தமிழகம் இந்தியாவில் எண்ணிக்கையில் முன்னேறியதற்கான முக்கியக் காரணம். இன்று திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டைப் பார்க்கையில், பல ஊர்களின் சந்தைகளைப் பார்க்கையில் மனம் பதைபதைக்கின்றது. தனி மனித இடைவெளியும், முகக் கவசமும், கைகளை சோப்பு நீரில் கழுவிவைப்பதும் மட்டுமே நம்மை வைரசில் இருந்து விலக்கி வைப்பதற்கான உலகம் முழுக்க அறிவியலாளர் காட்டும் ஒற்றை வழி

கபசுரக் குடினீரின் பயன் மத்திய சித்த மருத்துவ கவுன்சில், தேசிய சித்த மருத்துவ நிறுவனம், சித்த மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் தமிழக அரசின் சித்த மருத்துவ அலுவலர்களால் அறிவியல் வழியிலும் ஆராயப்படுகின்றது. ஆரம்ப கட்ட பல ஆய்வுகள் வரவேற்கத்தக்க முடிவுகளைத் தந்துள்ளன.

தமிழக அரசின் இந்திய மருத்துவத்துறை மருத்துவர்கள் தமிழகமெங்கும் கபசுரக் குடிநீரை பரிந்துரைத்து விநயோகிக்கின்றனர். கபசுரக் குடிநீர், இஞ்சி, எலுமிச்சை சாறு, சுக்கு மல்லிக் காபி, ஆடாதோடை அதிமதுரம் கசாயம், என பல மரபு சித்த மருந்துகள் அடிப்படை நோய் எதிர்ப்பாற்றலைக் கூட்டவும், வைரசுக்கு எதிராக போராடும் உடலுக்கு வலு சேர்க்கவும் உதவிடும். இனி வரும் நாட்களில் தினம் இவற்றை பருகிடுவோம்.

கூட்டம் சேர்த்தல்தான் மிக மிக முக்கியமாக தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. இனி வரும் நாட்களிலும் பணிக்குச் செல்லும் போதும் தனிமனித இடைவெளி, முக கவசம் கைகளை கழுவுதலை மறந்துவிட வேண்டாம்! ஏதோ ஒருவகையில் இப்போதுவரை இயற்கை துணை நிற்கின்றது. அறிவியலின் உண்மைகளையும் உதாசீனப்படுத்தாமல் துணைகொண்டு பின்பற்றினால் நிச்சயம் கரோனாவைக் கடந்து செல்லலாம்.