மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி? பா.ஜ.க. மானம் காற்றில் பறக்குது!

காங்கிரஸ், ஜனதாதளம் கூட்டணி பலமாக இருந்த கர்நாடகாவில், பா.ஜ.க.வை ஆட்சியில் அமரவைக்க அமித் ஷா என்னவெல்லாம் செய்தார் என்று ஆடியோ வெளியாகி மானம் காற்றில் பறக்கிறது.


 மகாராஷ்டிராவில் தனிப்பெரும் கட்சியாக 105 இடங்களில் பா.ஜ.க. ஜெயித்தும் ஆட்சியில் அமரவைக்க முடியாமல் தவிக்கிறது. 288 உறுப்பினர் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் பா.ஜ.க. 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. மற்றொரு கூட்டணியில் இருந்த காங்கிரஸ் 44 இடங்களையும் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களையும் கைப்பற்றின.

ஆட்சியில் சமபங்கு என்று தேர்தலுக்கு முன்பு பேசியவகையில், முதல்வர் பதவியை சுழற்சி முறையில் தலா இரண்டரை ஆண்டுகள் பகிர்ந்து கொள்ள சிவசேனா விரும்பியது. ஆனால், 100 இடங்களுக்கும் மேல் வெற்றிபெற்றதால் பா.ஜ.க. அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது.

ஆனாலும் மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி முதலில் பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். ஆனால் போதிய பலம் இல்லாததால் பாஜ அதற்கு மறுத்து விட்டது. அதன்பிறகு சிவசேனாவை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைத்து இரவு 7.30 மணிக்குள் முடிவை தெரிவிக்கும்படியும் ஆளுநர் கூறியிருந்தார்.

சிவசேனா, காங்கிரஸிடம் ஒப்புதல் பெறுவதற்கு கூடுதல் நேரம் சிவசேனா சார்பில் கேட்கப்பட்டது. ஆனால், சிவசேனாவுக்கு கூடுதல் நேரம் வழங்க மறுத்த ஆளுநர், 3வது பெரிய கட்சியான சரத் பவாரின் தேசியவாத காங்கிரசுக்கு அழைப்பு விடுத்தார். பவார் கட்சிக்கு ஆட்சி அமைக்க 24 மணி நேர அவகாசம் அளித்தார் கவர்னர். பவார் அழைப்பை ஏற்கவில்லை. 

இந்த நிலையில் சட்டப்பேரவை பதவிக் காலம் நவம்பர் 9ம் தேதியுடன் முடிந்துவிட்டதால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துமாறு மத்திய அரசுக்கு ஆளுநர் பரிந்துரை செய்துள்ளார்.

இதுகுறித்து இன்று மோடி தலைமையில் ஆலோசனை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதிகாரப்பூர்வமாக ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டால் அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர சிவசேனா முடிவு செய்துள்ளது. அதன்படி, மகாராஷ்டிராவில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் போதிய அவகாசம் தரவில்லை என உச்சநீதிமன்றத்தில் சிவசேனா தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மனுதாக்கல் செய்துள்ளார்.

மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு முறையிடவும் சிவசேனா திட்டமிட்டுள்ளது. சிவசேனாவை சரிக்கட்டி ஆட்சியில் அமரவைக்க முடியவில்லை என்று பா.ஜ.க.வை கேலி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.