தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜயகாந்த், 68 வயது முடிவடைந்து 69-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவரது பிறந்த தினம், வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பிரேமலதா ஓப்பன் டாக்.! அ.தி.மு.க.வுடனே இருக்கிறோம்.
சென்னையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா தலைமையில் அக்கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். அப்போது, துணைச் செயலாளர் சுதீஷ், விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, “விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார். கொரோனா காலம் என்பதால் அவரை யாரும் சந்திக்க முடியவில்லை. அடுத்த வருடப் பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாடுவோம். அனைவரும் அவரை சந்திக்கலாம். தேர்தலுக்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது. இப்போதுவரை அ.தி.மு.க. கூட்டணியில்தான் இருக்கிறோம். ஆனால், உரிய நேரத்தில் செயற்குழு, பொதுக் குழுவைக் கூட்டி கூட்டணி பற்றி விஜயகாந்த் அறிவிப்பார்.
விஜயகாந்த் கிங் ஆகத்தான் இருக்க வேண்டும், தனித்துப் போட்டியிடத் தயாராக இருக்கிறோம் என மாநிலம் முழுவதும் நிர்வாகிகள் கூறுகின்றனர். சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாட்டை டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் வெளியிட வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்தார். முதல்வர் வேட்பாளர் பிரச்சினை என்பது அதிமுகவின் உட்கட்சி விவகாரம், அதனை அவர்கள் பேசித் தீர்த்துக்கொள்வார்கள் என்றும் கருத்து தெரிவித்தார் பிரேமலதா