சந்திரமுகியில் பிரேமலதா நடிச்சிருக்கலாம்! டிடிவி தினகரனின் நூதன டேஸ்ட்!

சந்திரமுகி திரைப்படத்தில் ஜோதிகாவிற்கு பதிலாக பிரேமலதா நடித்திருக்கலாம் என்று நூதன யோசனை கூறியுள்ளார் டிடிவி தினகரன்.


நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றுள்ளது. தேமுதிக நான்கு இடங்களில் போட்டியிடவுள்ள நிலையில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

இதுநாள் வரை அதிமுக அரசையும் எடப்பாடி ஓபிஎஸ் போன்றோரை கடுமையாக விமர்சித்தும் வந்த பிரேமலதா விஜயகாந்த் தற்போது அதிமுகவை புகழ்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் டிடிவி தினகரன் பிரேமலதாவை விமர்சித்து கடுமையாகப் பேசியுள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தில் டிடிவி தினகரன் பேசியதாவது: பிரேமலதா பிரச்சாரத்தை அண்மையில் பார்க்க நேர்ந்தது. ஒருவரால் இப்படி நடிக்க முடியுமா என்று பார்த்து நான் அதிர்ந்து போய் விட்டேன். அதிமுக அரசை கடுமையாக விமர்சித்து வந்த பிரேமலதா திடீரென இப்படி புகழ்கிறார் என்றால் எனக்கு ஆச்சரியமாகவும் இருந்தது.

அப்போது எனக்கு ஒன்று தோன்றியது. சந்திரமுகி திரைப்படத்தில் ஜோதிகா மிகச் சிறப்பாக நடித்திருப்பார். பேயாகவும் அதே சமயத்தில் ஒரு பெண்ணாகவும் ஜோதிகா சந்திரமுகி திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். 

அந்த ஜோதிகாவையும் மிஞ்சும் அளவிற்கு பிரேமலதா தற்போது நடித்து வருகிறார். எனவே சந்திரமுகி திரைப்படத்தில் பிரேமலதா நடித்திருந்தால் அந்தப் படம் இன்னும் நன்றாக ஓடி இருக்கும். இவ்வாறு டிடிவி தினகரன் பேசினார்.