நிறை மாத கர்ப்பிணி அகல்யாவிற்கு பிரசவ அறையில் ஏற்பட்ட விபரீதம்! தவிக்கும் கணவன்!

மதுரை மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றில் மருத்துவர் துணையின்றி, செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பொதுவாக கிராமப்புறங்களில் ஏழ்மை நிலையில் வாழும் மக்கள் மருத்துவ சிகிச்சை பெற அந்தந்த மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சென்றுவர போதிய வசதி இல்லையென்பதால், கிராமங்களில் உள்ள சுகாதார நிலையங்களை பயன்படுத்தி வருகின்றனர். 

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பெருமாள் நகரைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரின் மனைவியான, நிறைமாத கர்ப்பிணி அகல்யாவுக்கு நேற்று இரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அகல்யாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து உறவினர்கள் அருகில் உள்ள கச்சைக்கட்டி என்ற கிராமத்தில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அகல்யாவை அழைத்து சென்றனர். 

இன்று அதிகாலை 2.30 மணியளவில் மருத்துவமனையில் செவிலியர்கள் முன்னிலையில் பிரசவம் நடக்க அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் அகல்யா. குழந்தை பெற்ற பின் சிறிது நேரம் சாதாரண நிலையில் இருந்த அகல்யாவுக்கு 2 மணிநேரம் கழித்து திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனை சமாளிக்க முடியாமல் செவிலியர்கள் இருக்கவே, அகல்யா திடீரென உயிரிழந்துள்ளார். 

இதையடுத்து அதிர்ச்சியடைந்த கணவரும் உறவினர்களும் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளானார்கள். ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாமல் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால்தான் அகல்யா உயிரிழந்துள்ளதாகவும் அவர்மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

ஒரு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லையென தெரிந்தும் செவிலியர்கள் மீது முழு நம்பிக்கை வைத்து பிரசவம் பார்த்துள்ளனர். தற்போது அகல்யாவுக்கு பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்த பின்னர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்வது எந்த விதத்தில் நியாயம் என செவிலியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.  

பெண்ணுக்கு ஒவ்வொரு பிரசவமும் மறுஜென்மம் எடுப்பது போல் என்பார்கள். இங்கே அகல்யா, மறுஜென்மத்தில் அவர் ஈன்றெடுத்த குழந்தையாகவே இந்த உலகிற்கு வந்துள்ளார் என்று பாலமுருகனுக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.