திடீர் பிரசவ வலி! விரைந்து வந்த 108! ஆனாலும் துடித்த கர்ப்பிணி! ஆம்புலன்ஸ்க்குள் நிகழ்ந்த பிரசவம்!

ஈரோடு மாவட்டத்தில் நிறைமாத கர்ப்பிணியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 108 ஆம்புலன்சிலேயே அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கணக்கரசம்பாளையத்தை சேர்ந்தவர் காளிமுத்து இவரது மனைவி கிருத்திகா. தற்போது கிருத்திகா நிறைமாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் நேற்று இரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டிலுள்ளவர்கள் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து ஆம்புலன்ஸ் வந்த நிலையில் கிருத்திகாவை அதில் ஏற்றி புஞ்சை புளியம்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். அங்கு சென்ற அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் பிரசவ வலி அதிகமானதால் உயர் சிகிச்சைக்காக கோபிச்செட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி சுகாதார நிலையத்தில் உள்ள செவிலியர்கள் தெரிவித்துள்ளனர்.  

இதையடுத்து கிருத்திகாவை ஆம்புலன்ஸ் சேவை மூலம் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது காசிபாளையம் அருகே வந்து கொண்டிருக்கும்போது கிருத்திகாவுக்கு அதிகப்படியான வலி ஏற்பட்டது. இந்நிலையில் ஆம்புலன்சில் உள்ள உதவியாளர் மதன்குமார் பிரசவம் பார்த்துள்ளார்.

இந்நிலையில் சுகப்பிரசவத்தின் மூலம் கிருத்திகாவுக்கு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதையடுத்து இருவரும் கோபிச்செட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர். அங்கு தாயும் சேயும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.