நிறைமாத கர்ப்பிணிகளுக்கு வெட்ட வெளியில் சிகிச்சை! உயிரோடு விளையாடும் அரசு மருத்துவமனை!

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு வெட்டவெளியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.


அரசு தலைமை மருத்துவமனையில் போதிய வசதிகள் இருந்தும் புதியகட்டிடம் திறக்கப்படாத நிலையில் பொதுமக்களுக்கு வெட்டவெளியில் சிகிச்சை அளிக்கப்படும் அவலம் நிகழ்ந்துள்ளது. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு வெட்டவெளியில் மற்றும் மருத்துவமனை வராண்டாவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிரசவத்திற்காக வெளியூர்களில் இருந்து வரும் பெண்கள் தங்குவதற்கு போதிய இடவசதி கூட இந்த மருத்துவமனையில் இல்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

பிரசவத்திற்காக வரும் பெண்களுக்கு போதிய ஊட்டச்சத்து உணவு இந்த மருத்துவமனையில் வழங்கப்படுவதில்லை என தெரிவித்துள்ளனர். கடந்த ஓராண்டுக்கு முன்னர் மருத்துவமனை வளாகத்தில் பல கோடி மதிப்பிலான புதிய கட்டிடம் மற்றும் மருத்துவத்திற்குத் தேவையான புதிய நவீன உபகரணங்களை அரசு வழங்கியுள்ளது.

இந்நிலையில் புதிய கட்டிடம் திறக்கப்படாத நிலையில் மக்கள் வெட்டவெளியில் தங்கி மருத்துவம் பார்த்து வரும் அவலம் அரங்கேறி உள்ளது. இதுகுறித்து அரசு மருத்துவமனை தலைமை மருத்துவரிடம் கேட்டபோது கூடிய விரைவில் புதிய கட்டிடம் திறக்கப்படும் என தெரிவித்துள்ளார். பின்னர் இதுகுறித்து பொதுமக்கள் ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவிடம் மனு ஒன்றை அளித்தனர்

இந்நிலையில் மனுவை பரிசீலனை செய்த மாவட்ட ஆட்சியர் கூடிய விரைவில் அந்த கட்டிடம் திறக்க ஏற்பாடு செய்யப் போவதாக தெரிவித்துள்ளார். போதிய வசதிகள் இருந்தும் சிகிச்சைக்கு வருபவர்களை வெட்டவெளியில் தங்க வைத்து சிகிச்சை அளித்து வருவது பார்ப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.