இனிமேல் ஸ்டாலின் அரசியல் குரு அண்ணாவும், கருணாநிதியும் இல்லையாம்! பிரசாந்த் கிஷோரை பகிரங்கமாக ஒப்புக்கொண்ட மு.க.ஸ்டாலின்!

பண்ணையார்களின் கட்சியெனக் கூறப்பட்ட காங்கிரஸ் கட்சிக்கு எதிராக உருவாகி வளர்ந்த தி.மு.க.வில், அதன் பாரம்பரிய தொண்டர் பலத்தின் அடிப்படையைக் கைவிட்டுவிட்டு தேர்தலில் வெற்றிபெறுவதற்காக தனியார் நிறுவனம் ஒன்றுடன் அக்கட்சி கைகோர்த்துள்ளது.


பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த் கிசோர் என்பவர் தலைமையிலான இந்தியன் பொலிட்டிக்கல் ஆக்சன் கமிட்டி எனப்படும் ஐபாக் நிறுவனமானது, தேர்தல்களில் ஆட்சியைப் பிடிப்பதற்கான ஆலோசனைகளையும் அதற்கான ஆய்வுகளையும் செய்துதரக்கூடிய ஒன்றாகும். இது, கட்சிகளைக் கடந்த அரசியல் செயற்பாட்டு அமைப்பு என தன்னைத்தானே கூறிக்கொண்டாலும்,

குஜராத் முதலமைச்சர் தேர்தலிலும் பிரதமர் தேர்தலிலும் மோடி பதவிக்கு வருவதற்கான ஆலோசனைகளில் ஈடுபட்டவர், பிரசாந்த் கிசோர் என்பது தேர்தல் களத்தின் பகிரங்கமாக இரகசியம். அதையடுத்து, பீகாரில் நிதீசுகுமார், ஆந்திரத்தில் அண்மையில் ஒய்.எஸ்.ஆர். இராஜசேகரின் மகன் ஜெகன் மோகன் ஆகியோரின் வெற்றிக்குப் பின்புலமாக இருந்தது, இந்த நிறுவனமே ஆகும். 

தமிழ்நாட்டில் புதிதாகக் கட்சிதொடங்கிய நடிகர் கமலுக்கும் தொடக்கத்தில் ஐபாக்கின் தொடர்பு இருந்துவந்தது. திமுகவுக்கோ இந்த நிறுவனத்தில் முன்னர் பணியாற்றிய சுனில்குமார் என்பவர் தலைமையிலான குழுவினர், கடந்த ஏழு ஆண்டுகளாக பின்னணிச் செயற்பாட்டு பணிகளை மேற்கொண்டுவந்தனர். இதற்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் தனி அலுவலகம் அமைத்து பணியாற்றிவந்தனர். கடந்த இரண்டு பொதுத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரப் பயணம், நமக்கு நாமே எனும் மக்கள் சந்திப்புப் பயணம் ஆகியவை, இந்தக் குழுவினரின் பங்களிப்புடனேயே நடைபெற்றது.

இந்த நிலையில், கடந்த நவம்பரில் திடீரென பிரசாந்த் கிசோருடன் தி.மு.க. ஒப்பந்தம் செய்துகொண்டதாக தகவல் வெளியானது. அதையொட்டி ஊடகங்களில் ஊகத்தகவல்கள் மட்டுமே வெளிவந்திருந்த நிலையில், சுனில்குமார் குழுவினர் திமுகவுடனான உடன்பாட்டை முறித்துக்கொண்டனர். ஆனாலும் பி.கி. குழுவினர் தங்கள் பணியைத் தொடங்கியதாகவும் தெரியவில்லை. சில வாரங்கள் இந்த விவகாரத்தில் அமைதி நிலவியது.

இப்போது டெல்லி தேர்தல் பணிகள் முடிவடைந்ததை அடுத்து, தமிழ்நாட்டுத் தேர்தல் உடன்பாட்டின் வேலைகளை பி.கு. நிறுவனமானது தொடங்கியுள்ளது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினே இத்தகவலை இன்று மாலை பகிரங்கமாக தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டார். அதற்கு, ஐபாக் நிறுவனத்தின் சார்பில் நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சோறு தண்ணீர் இல்லாமல் சுவரொட்டி ஒட்டி வளர்க்கப்பட்ட இயக்கமான தி.மு.க., மக்களின் நாடித்துடிப்பை அறிவதற்கு கீழ்மட்டம்வரை பரவியுள்ள தன் கட்சி அணிகளால் முடியவில்லை என முடிவெடுத்துவிட்டதா? அல்லது கட்சித் தலைமையில் ஸ்டாலின் குடும்பத்தினரின் தலையீடு அதிகரித்து, வெற்றிபெற வேண்டுமென்றால் பாஜக பாணியில் தேர்தலை அணுகவேண்டும் என முடிவெடுத்ததால் இந்த நிலைக்கு வந்துள்ளதா என சில வாரங்களாக கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் வாதப் பிரதிவாதங்கள் நடந்துவருகின்றன. கமுக்கமாகவே வைக்கப்பட்டிருந்த இந்த உடன்படிக்கையானது ஸ்டாலினின் இன்றைய தகவல் மூலம் பகிரங்கமாக ஆக்கப்பட்டுள்ளது.