காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து போராடிய பினராயி விஜயன்! இது கேரள ஸ்டைல்!

மக்கள் பிரச்னைக்காக எதிர்க்கட்சிகளுடன் இணைந்து போராடுவதற்கு கம்யூனிச கட்சி எப்போதும் தயாராக இருக்கிறது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து இருக்கிறார் பினராயி விஜயன்.


ஆம், இன்று கேரளாவில் நடைபெற்ற குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிரான கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் ஒரே மேடையில் ஏறி, கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்தார்.

அவர் பேசியபோது, ‘‘சிறுபான்மையினருக்கு குடியுரிமை தரக்கூடாது என்று யார் சொன்னாலும் அது பற்றி கவலை இல்லை, இங்கு கேரளாவில் நாங்கள் அதை ஏற்க மாட்டோம். நான் இதைக் கூறும்போது ஒரு மாநில அரசு இதுபோன்ற விவகாரங்களில் முடிவெடுக்க முடியுமா என்று சிலர் கேட்கலாம்.

மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கம், மற்றும் குடியுரிமை சட்டங்கள் என அனைத்துமே அரசியல் சாசனத்தின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டிருக்கின்றன. நாம் எந்த அரசியல் சாசனத்தின் மீது உறுதிமொழி கூறி பதவி ஏற்றுக்கொண்டு இந்த அரசாங்கத்தை அமைத்தோமோ, அந்த அரசியல் சாசனத்துக்கு உட்பட்டதே அரசாங்கம். அந்த அரசியல் சாசனத்தை நாசம் செய்ய யார் நினைத்தாலும் நாங்கள் அதை எதிர்ப்போம்.

கேரள அரசாங்கம், அரசியல் சாசனத்துக்கு மட்டுமே பதில் சொல்ல கடமைப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். முன்வைக்கும் உள்நோக்கம் கொண்ட திட்டங்களுக்கு அல்ல’’ என்று வெளிப்படையாகவே போட்டுத் தாக்கியுள்ளார்.