தேச பக்தை பிரக்யா தாகூருக்கு ஜே! தேசப்பிதா கோட்சே வாழ்க!

இதுவரை இந்தியாவில் இரண்டுவிதமான தேசபக்தர்கள் இருந்தார்கள். மகாத்மா காந்தியின் அற வழியை நேசிக்கும் மனிதர்கள் ஒரு புறமும், நேதாஜியின் வீரத்தைப் போற்றும் மனிதர்கள் ஒரு புறமும் நின்றனர்.


இப்போது மோடியின் ஆட்சியில் புதிதாக ஒரு கும்பல் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. வீர சாவர்கர், கோட்சே போன்றவர்கள்தான் அவர்களுடைய ஆதர்ச புருஷர்கள். காந்தியை ஒரு பக்கம் புகழ்ந்துகொண்டே, அவரை சுட்டுக்கொன்ற கோட்சேவுக்கு ஆராதனை எடுக்கும் நிகழ்வும் நடக்கிறது.

தேசத்தில் மட்டும் நடந்துவந்த இந்த அவமானம், இந்திய நாடாளுமன்றத்திலும் தேச பக்தையான பிரக்யா தாகூரால் நுழைந்தே விட்டது. இந்து மதம் மட்டுமே இந்தியாவில் இருக்க வேண்டும் என்ற கொள்கை, கோட்பாட்டுடன் திகழும் இன்றைய ஆளும் கட்சிக்கு கோட்சேதான் தேசப் பிதா. 

அதனால்தான் மக்களவையில் சிறப்பு பாதுகாப்புப் படை சட்டத் திருத்த்தின் மீது பேசிய தி.மு.க.வின் ஆ.ராசா எம்.பி. காந்தி கொலை தொடர்பாக கோட்சே சொன்னதைக் குறிப்பிட்டபோது, பிரக்யா தாகூர் எழுந்து குரல் உயர்த்தி ஆட்சேபம் தெரிவித்தார்.

அவருடைய பேச்சு அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுவிட்டன என்றாலும் அவரது கோபம் அங்கேயேதான் இருக்கிறது. கோட்சேவை தேசபக்தர் என்ற் சாத்வி பேசியதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

இன்று நாடாளுமன்றத்தில் இது போன்ற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற சிந்தனையில், பிரக்யா பேசிய பேச்சுக்கள் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் கோரிக்கை வைத்தன. ஆனால், வழக்கம்போல் எதிர்க்கட்சிகள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டது.

காந்தியின் வழியில் நடப்பதாகச் சொல்லும் மோடியின் அரசுக்கு கோட்சேதான் பாதுகாவலன் என்பதுதான் விசித்திரம்.