பொள்ளாச்சியில் பழங்குடியின தம்பதிக்கு உதவுவது போல நடித்து குழந்தையை கடத்திய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
மீண்டும் பொள்ளாச்சி! பழங்குடியின பெண்ணுக்கு ஏற்பட்ட நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்!

கோவை மாவட்டம், ஆனைமலையை அடுத்த காளியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாலன். இவரது மனைவி தேவி. பழங்குடி மக்களான இவர்களுக்கு ஏற்கெனவே இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், மூன்றாவது பிரசவத்துக்காக கடந்த் மாதம் 29-ஆம் தேதி பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் தேவி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் ஒரு பெண் தன் கணவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அறிமுகப்படுத்திக்கொண்டார். ஆண்கள் பிரிவில் பெண்கள் தங்க அனுமதியில்லை என்றும் கூறிய அந்தப் பெண் தான் அவர்களுடனேயே தங்கியிருந்து குழந்தையையும் பார்த்துக் கொள்வதாக கேட்டுக்கொண்டதை நம்பி பாலன் தம்பதி ஏற்றுக்கொண்டனர்.
அவர்களுடனேயே தங்கிய அந்தப் பெண் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் அளவுக்கு நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு புறப்பட்ட போது குழந்தைக்கு காதில் கொப்புளம் உள்ளதாகவும், மருத்துவரிடம் காட்ட வேண்டும் என அந்தப் பெண் கூறிய நிலையில் பாலன் குழந்தையை எடுத்துக்கொண்டு அந்தப் பெண்ணுடன் சென்றார்.
இந்நிலையில் குழந்தைக்கு சொட்டு மருந்து வருமாறு அந்தப் பெண் கூறியதை அடுத்து கடைக்குச் சென்ற பாலன் திரும்பி வந்து பார்த்த போது குழந்தையுடன் அந்தப் பெண் தலைமறைவானது தெரியவந்தது. இதுகுறித்து, பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.