அரசியல் சாணக்கியர் அமித் ஷா, நமுத்துப்போன பட்டாஷாக மாறியது எப்படி?

அமித் ஷா நினைத்தால் பாகிஸ்தானிலும் பா.ஜ.க.வை மலர வைப்பார் என்று பா.ஜ.க.வினர் பெரும் குரல் கொடுத்து பாராட்டி வந்தனர்.


இந்த நிலையில் அமித் ஷா எங்கு தப்பு செய்தார் என்று வலம் வரும் பிரபல பதிவு இது. மறுபடியும் நொறுங்கிப்போயிருக்கிறார் அமித்ஷா! ஏற்கெனவே கர்நாடகத்துப் பாஜக (மாப்)பிள்ளைகள் சில மாதங்களுக்கு முன்னால் கொடும்பாவியை எரித்துச் சாம்பலாக்கி அமித்ஷாவை டம்மிபீஸாக ஆக்கினார்கள்.

அன்றே அவர் பாடம் படித்திருக்க வேண்டும். பட்னாவிஸ் பதவியேற்றவுடன் அனைத்துச் சங்கிகளும் மோடிபஜனையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டு அமித்ஷா பஜனையைத் தொடங்கினர்.

ஆனால் ஜனநாயகத்தின் மீதான இந்தக் கோரப்படுகொலையை சரத்பவாரும் சோனியா காந்தியும் மட்டுமல்லாமல், (சொல்லவே சங்கடமாயிருந்தாலும்) உத்தவ் தாக்கரேயும் எதிர்கொண்ட விதம் அபாரமானது. நேற்று அவர்கள் தத்தம் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்து நிறுத்தியதில் மூன்று தரப்புகளுமே அதிர்ச்சியடைந்து விட்டன.

முதலில் சுப்ரீம் கோர்ட், இரண்டாவது அஜித் பவார், மூன்றாவது டெல்லி சுல்தான்கள். உலக சாட்சியமாகத் தங்களை இவர்கள் இப்படி அம்பலமாக்கி விடுவார்களென்று இம்மூன்று தரப்பும் எதிர்பார்க்கவில்லை.

வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டதுமே பட்னாவிஸின் வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, தங்களுக்கு மூன்று நாள்கள் அவகாசம் வேண்டுமென்றார். அதை மறைமுகமாக ஏற்றுக்கொண்டது சுப்ரீம் கோர்ட். சனிக்கிழமை தொடுக்கப்பட்ட வழக்கை நாளைவரை இழுத்தடித்துச் சென்ற சுப்ரீம்கோர்ட்டின் தந்திரமும் மகத்தானதுதான்.

சரத்பவாரின் மேன்மை துலங்கிய நாள்கள் இவையென்று சொல்லலாம். கட்சியைப் பிளவை நோக்கித் தள்ளிவிடாமல் காட்டிய உறுதி அபாரமானது. அஜித் பவாரை மோடி அரசு நெருக்கியதா என்ற கேள்வியை பவார் எதிர்கொண்டபோது, ‘அதுபற்றி எனக்குத் தெரியாது’’ என்றுதான் சொன்னாரே தவிர, மோடி -_ அமித்ஷா கும்பலைப் போல கொந்தளித்து வார்த்தைகளைக் கொட்டித் தீர்க்கவில்லை.

இரண்டாவதாக, அஜித் பவாரோடு வேறெந்த சட்டமன்ற உறுப்பினரும் போகாத நிலையில் அவரையும் சமாதானப்படுத்த முயன்றதில் அவர் தன் பெருந்தன்மையைக் காட்டிவிட்டார். மேலும் கட்சியிலிருந்து அவர் நீக்கப்படுவாரா என்று கேட்டபோதும், ‘அதைக் கட்சிதான் முடிவுசெய்யும்’ என்றார். இந்த நிதானம் அப்படியே பா.ஜ.க.வை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தப் போதுமானவை.

சிவசேனாவின் சஞ்சய் ரௌத் கூட பாஜகவைச் சுழற்றியடித்திருக்கிறார். ”ஆட்சி அதிகாரமில்லாவிட்டால் பா.ஜ.க.வினர் மனநிலை பிறழ்ந்துவிடுவர்; நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும் பா.ஜ.க. தலைவர்களுக்குச் சிகிச்சையளிக்க சிறப்பு மருத்துவமனைகள் அமைப்போம்’’ என்றார்.

என்னதான் இருந்தாலும் சின்ன சங்கிகளிடம் பெரிய சங்கிகள் இந்த அளவிற்குத் தாறுமாறாக வாங்கிக்கட்டிக்கொண்டிருக்கக் கூடாது. அமித்ஷாவே இப்படி ஆடிக்காற்று அம்மியாவாரா என்று அவரின் செல்லத் தொண்டர்கள் சித்தம் கலங்கிக்கிடக்கிறார்களாம்.