போலீசின் ஹெல்மெட் சோதனை! சடன் பிரேக் போட்ட இளம் பெண்! கால்களை இழந்த பரிதாபம்!

ஹெல்மெட் அணியாமல் சென்ற இளம்பெண்ணை போலீஸார் தடுத்தபோது லாரி மோதியதில் பெண்ணின் கால்கள் நசுங்கியது. இதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


சென்னை பாடியநல்லூர் பகுதியை சேர்ந்த யுவனேஷ் மற்றும் பிரியா தம்பதியினர். இவர்கள் இருவரும் நேற்று இரவு வெளியே சென்றுவிட்டு வீடு திரும்புவதற்காக செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலை கடந்தனர். 

அப்போது சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், பிரியா ஹெல்மெட் அணியாததால் தடுக்க முயற்சித்தனர். அச்சமயம் நெடுஞ்சாலை வழியே சென்ற லாரி பிரியாவின் இருசக்கர வாகனத்தில் மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்த பிரியாவின் கால்களில் லாரி ஏறியது. கால்கள் நசுங்கியதில் வலியால் பிரியா துடிதுடித்து போனார். 

இதைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக அருகில் இருந்த ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பிரியாவை எடுத்து சென்றனர். மேலும் விபத்திற்கு போலீசார் தான் காரணம் என பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை சூப்பிரண்டு மற்றும் சில ஆய்வாளர்கள் பொதுமக்களை கலைந்து செல்லும்படி வற்புறுத்தினார். தொடர்ந்து போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது. 

இதனிடையே தடியடி நடத்தி பொதுமக்களை களையச் செய்து போக்குவரத்தினை காவல்துறையினர் சீர் செய்தனர். தொடர்ந்து இரண்டு மூன்று மணி நேரங்களுக்கு மேலாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.