சார் நாங்க பேங்க்ல இருந்து பேசுறோம்..! போலீஸ் சப் இன்ஸ்பெக்டருக்கே விபூதி! ரூ.1 லட்சம் ஸ்வாகா! ராமநாதபுரம் பரபர!

அப்பாவி மக்களை ஏமாற்றி வங்கிக் கணக்கில் பணம் திருடும் சம்பவம் தொடரும் நிலையில் போலீஸ் ஒருவரே ஏமாந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


ராமநாதபுரத்தில்தான் காவல்துறை சார்பு ஆய்வாளரை ஏமாற்றி பணம் பறித்த சம்பவம் தற்போது நடந்துள்ளது. 

சிறுக சிறுக, கஷ்டப்பட்டு, வீடு பெருக்கி, கூலித்தொழில் செய்து, ரிக்ஷா ஓட்டி, விவசாயம் செய்து சேர்த்து வைத்த பணத்தை யாரோ சில வடமாநிலத்தை சேர்ந்த திருடர்கள் உட்கார்ந்த இடத்தில் இருந்தே அபேஸ் செய்து கொண்டு போய்விடுகின்றனர். அதன் பின்னர் அந்த மீட்க காவல்துறை, நீதிமன்றம் என நாடினாலும் இறுதியில் மிஞ்சுவது ஏமாற்றமே.

இந்நிலையில் ராமநாதபுரத்தில் காவல்துறை சார்பு ஆய்வாளரான கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு மோசடி கும்பலை சேர்ந்த ஒருவன் போன் செய்துள்ளான். அவரிடம் ஏடிஎம் கார்டு பயன்பாட்டு காலம் முடிந்துவிட்டது என்றும், உடனடியாக புதுப்பிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளான். யார் போன் செய்து கேட்டாலும் வங்கிக் கணக்கு விவரங்களை கொடுக்கக்கூடாது என போலீசார்தான் மக்களுக்க அறிவுரை கூறி வருகின்றனர்.

ஆனால் அவரே அந்த கும்பலின் சதி திட்டம் தெரியாமல் அந்த முகம் தெரியாத நபருக்கு தன்னுடைய கனரா வங்கிக் கணக்கின் ஏடிஎம் கார்டு விவரங்களையும், பின்னர் ஓடிபி எண்ணையும் தெளிவாக கொடுத்துள்ளார். கொடுத்த அடுத்த வினாடியே அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் எடுக்கப்பட்டு விட்டதாக குறுஞ்செய்தி அவரது மொபைலுக்கு தங்கு தடையின்றி சென்றுள்ளது.

இதனால் கிருஷ்ணமூர்த்தி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தனக்கு வந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது வழக்கம்போல் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னரும் இந்த செய்தியில் சொல்ல வேண்டியது ஒன்றும் இல்லை. அனுபவத்தில் மட்டுமே திருந்துவோம் என சிலர் உள்ளவரையில் நான் ஒன்றும் தனியாக விழிப்புணர்வு தந்து பிரயோஜனம் இல்லை.