டெல்லி போராட்டத்தில் போலீஸ் பலி..! அதிரடி ஆரம்பமாகிறதா..?

டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் போராடி வருபவர்களுக்கு இடையே நடந்த மோதலில் போலீஸ்காரர் ஒருவர் உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர்.


மேலும் துணை போலீஸ் கமிஷனர் உள்பட பல போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்துள்ளனர். டெல்லி மௌஜ்பூர் மற்றும் ஜாஃபராபாத் ஆகிய இடங்களில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மக்கள் போராடி வருகிறார்கள். இதேபோல் அங்கு குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவும் ஒரு தரப்பு மக்கள் போராடி வருகிறார்கள்.

இரு தரப்பும் பயங்கரமாக மோதிக்கொண்டதில் அந்த இடமே போர்க்களமாக மாறியது. இதில் தலைமைக்காவலர் ரத்தன் லால் என்பவர் போராட்டக்கார்கள் தாக்கியதால் தலையில் படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.

டெல்லியின் மௌஜ்பூர் மற்றும் ஜாஃபராபாத் பகுதிகளில் போராட்டக்கார்கள் பல வீடுகளையும் வாகனங்களையும் எரித்ததால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. சந்த் பாக் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளிலிருந்தும் வன்முறை வெடித்தது.

இந்நிலையில் வன்முறை பரவிய இடங்களுக்கு கூடுதல் போலீசாரை மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது. வன்முறை ஏற்பட்ட இடங்களில் எல்லாம் தற்போதும் கட்டுக்குள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் டெல்லியில் உள்ள நிலையில் போராட்டம் வன்முறையாக மாறி இருவர் கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் திங்கள் கிழமை இரவு டெல்லி ஜாஃபராபாத் பகுதியில் உள்ள குடிசைகள் பலவற்றை அடையாளம் தெரியாத நபர்களால் தீவைத்து கொளுத்தப்பட்டது. இதன் காரணமாக டெல்லி முழுவதும் கலவரக் கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

மேலும் வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்டுள்ள நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று டெல்லி ஆளுநர் அனில் பைஜால் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ”டெல்லியில் சில இடங்களில் அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் வகையில் நடைபெறுவதாக வரும் செய்திகள் மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன என்று கூறியுள்ள டெல்லி துணை நிலை ஆளுநர். உள்துறை அமைச்சகம் மூலம் சட்டம் ஒழுங்கை உறுதி செய்து அமைதியை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்..

வன்முறையை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது எனவும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக வட கிழக்கு டெல்லியில் நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால், தலைநகரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தேவையான நடவடிக்கைளை எடுக்க வேண்டுமென உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று காலை இந்தியா வந்துள்ள நிலையில், டெல்லியில் நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணியன் கலியமூர்த்தி