வாய்க்கு பூட்டு போடச்சொல்லும் போலீஸ் கமிஷனர். வாயைக் குறைச்சா மோசடி குறையுமாம்.

தனித்தகவல்களை போனில் சொல்வதே 80 சதவீதம் - சைபர் குற்றங்களுக்கு காரணம் என்கிறார் சென்னை கமிசனர்.


இணையவழியிலான குற்றங்களில் 80 சதவீதம் தனிப்பட்ட தகவல்களை தொலைபேசியில் பரிமாறிக்கொள்வதால்தான் ஏற்படுகின்றன என்று சென்னை மாநகர போலீஸ் ஆணையர் விசுவநாதன் தெரிவித்துள்ளார். மாநகர போலிசும் ஆக்சிஸ் வங்கியும் இணைந்து பாதுகாப்பான வங்கிச் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வுப் படம் ஒன்றை உருவாக்கியுள்ளன. இதன் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசியபோதே அவர் இதைத் தெரிவித்தார். 

“மாநகர போலீசின் இணையவழிக் குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அன்றாடம் ஏராளமான புகார்கள் வருகின்றன. இவை பலவிதமாக இருந்தாலும், வரும் புகார்களில் 80 சதவீதமானவை தொலைபேசியில் தனிப்பட்ட தகவல்களைத் தருவதால் செய்யப்படும் மோசடிகள் தொடர்பானவையாகவே இருக்கின்றன. வங்கிகள் எவ்வளவோ வாடிக்கையாளர்களிடம் இது குறித்து விழிப்பூட்டிவருகிறது.

ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல்லையோ சிவிவி எனப்படும் அட்டை சரிபார்ப்பு மதிப்பெண்னையோ தொலைபேசியின் மூலம் யாருக்கும் பகிரக்கூடாது என்று அறிவுறுத்தல்களை அனுப்பத்தான் செய்கின்றன. ஆனாலும் நன்கு படித்தவர்களேகூட தங்களின் ஒருமுறைக் கடவுச்சொல்லையும் அட்டை சரிபார்ப்பு மதிப்பெண்ணையும் தொலைபேசியில் சொல்லிவிட்டு, மோசடிக்காரர்களிடம் ஏமாந்துபோகிறார்கள். இப்படியான மோசடிக்காரர்களைக் கண்டறிவது கடினமாக இருக்கிறது” என்று விசுவநாதன் சுட்டிக்காட்டிப் பேசினார்.