தர்மயுத்தத்தில் அமர்ந்த நிர்மலா தேவி! தள்ளிட்டுப் போன போலீஸ்!

பன்னீர்செல்வம் அம்மா சமாதியில் அமர்ந்து தர்மயுத்தம் செய்தாலும் செய்தார், அவர் பாணியில் பலரும் தர்மயுத்தத்தில் இறங்கிவிடுகிறார்கள்.


அந்த வகையில் திடீரென இன்று தர்மயுத்தத்தில் அமர்ந்தவர், அருப்புக்கோட்டை ஆடியோ புகழ் நிர்மலா தேவி. கடந்த 2018ல் மாணவிகளை தவறான பாதையில் வழி நடத்தியதாக கூறப்பட்டு கைது செய்து சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த பேராசிரியை நிர்மலாதேவி இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். அடுத்த வாய்தா 22ம் தேதி என்று அறிவிக்கப்பட்டு விட்டது.  

வாய்தா தேதி அறிவித்த பின்பும் நீதிமன்றத்தை விட்டு வெளியேற மறுத்த நிர்மலா தேவி, திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் தியானம் செய்பவர் போன்று அமர்ந்து தர்மயுத்தத்தில் ஈடுபட்டார். எதுக்கும்மா இங்கே உட்கார்ந்திருக்கீங்க என்று பலரும் கேள்வி கேட்டனர்.

கண் திறக்காமல் அமைதியாக இருந்த நிர்மலா தேவி, சிறிது நேரம் கழித்து, ‘‘நான் குற்றவாளி இல்லை என்று என் கணவருக்கும், என் குடும்ப உறுப்பினர்களுக்கும் தெரிந்துவிட்டது. அதனால், எனது கணவர் சங்கரபாண்டி மற்றும் எனது உறவினர்கள் வந்து அழைத்துச்செல்லும் வரை போக மாட்டேன் என்று தியானத்தில் ஈடுபடத் தொடங்கினார்.

கூட்டம் கூடுவதைக் கண்டு அதிர்ந்துபோன காவல் துறை, உடனடியாக வம்படியாக நிர்மலா தேவியை வேனில் ஏற்றி ஊருக்கு வெளியே இறக்கிவிட்டது. இனிமேல், இந்த அம்மாவை கான்ஃபரன்ஸ் மூலம்தான் ஆஜர் படுத்தணும் என்ற அளவுக்கு நிலைமை போய்விட்டது. நிர்மலா தேவி ஏன் இப்படி திடீரென செய்கிறார் என்று கேட்டபோது, ‘அவர் தங்கியிருக்கும் இடத்துக்கு பல்வேறு நபர்கள் வருகிறார்கள், பாதுகாப்பு கருதித்தான் கணவர், மகளை எதிர்பார்க்கிறார்’ என்று சொல்கிறார்கள். அடுத்து என்ன போராட்டம் நடக்கப் போகுதோ...?