ஆசிரியர் பகவான் நியாபகம் இருக்கிறதா? பெண்ணை ஏமாற்றிய புகாரில் கைது!

தங்கள் பள்ளியில் இருந்து பணியிடமாற்றம் செய்ய கூடாது என்று மாணவிகள் அழுது புரளும் அளவிற்கு சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர் பகவான் கைது செய்யப்பட்டுள்ளார்.


திருவள்ளூர் மாவட்டம் பொம்மராஜூபேட்டையை சேர்ந்தவர் ஆசிரியர் பகவான். இவர் வெள்ளியகரம் எனும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அவரை கடந்த ஆண்டு பள்ளிக் கல்வித்துறை பணியிடமாற்றம் செய்தது.

ஆனால் ஆசிரியரை பணியிடமாற்றம் செய்யக்கூடாது என்று அவர் பணியாற்றிய பள்ளியில் மாணவ, மாணவிகள் கதறி அழுதனர். ஆசிரியவை பள்ளியில் இருந்து வெளியே விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் பகவானும் கண் கலங்கினார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு ஆசிரியர் என்றால் பகவான் தான் என்கிற அளவிற்கு அவர் புகழ் பெற்றார். இந்த நிலையில் இன்று காலை அவரது வீட்டுக்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து திருத்தணி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

ஆசிரியர் பகவானுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் ஏற்கனவே அவரது மாமன் மகளுடன் பழகியதாகவும் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாகவும் திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் பகவான் கைது செய்யப்பட்டு திருத்தணி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே பகவான் மீது புகார் அளித்தது அவரது சொந்த மாமா என்று கூறப்படுகிறது.

அதிமுக பிரமுகரான அவர் தனது மகளை பகவானுக்கு திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்ததாகவும் ஆனால் பகவான் அதற்கு உடன்படாத காரணத்தினால் பொய் புகாரில் கைது செய்ய வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.