திருப்பதி திருமலையில் தேவாலயம்! சிலுவை! வைரல் புகைப்படத்தின் உண்மை பின்னணி!

திருப்பதி மலைப்பகுதியில் சிலுவை பதிக்கப்பட்டதாக, சமூக ஊடகங்களில் வதந்திய பரப்பிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


 திருமலை திருப்பதியில் உள்ள வெங்கடாஜலபதி கோயில் உலகம் அறிந்த ஒன்றாகும். இங்குள்ள வனப்பகுதியின் உள்ளே சிலுவை பதிக்கப்பட்டதாகவும், தேவாலயம் ஒன்று தொடங்கப்பட்டு விட்டதாகவும் கூறி சிலர் சமூக ஊடகங்களில் தகவல் பகிர தொடங்கினர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  

அவர்கள் குறிப்பிடும் சிலுவையானது உண்மையில் வனத்துறையினருக்குச் சொந்தமான கண்காணிப்பு கோபுரத்தின் மேலே வைக்கப்பட்டுள்ள கம்பம் ஒன்றின் புகைப்படமாகும். அங்கு சிசிடிவி கேமிரா வைக்க முடிவு செய்து, அதற்காக வனத்துறையினர் கம்பம் ஒன்றை நிறுவி, பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

அதற்குள்ளாக, விஷமிகள் சிலர் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஒரு கிறிஸ்தவர் என்பதால், திருப்பதியில் உள்ள 7 மலைகளிலும் தேவாலயம் நிறுவப் போகின்றார், அதற்கான அடையாளமாக சிலுவை பதிக்கப்பட்டு வருவதாகக் கூறி, வதந்தி பரப்பியுள்ளனர். இதுபற்றி திருப்பதி தேவஸ்தானம் அளித்த புகாரின்பேரில், திருப்பதி போலீசார் வழக்குப் பதிந்து, 3 பேரை கைது செய்துள்ளனர்.