கன்னியாகுமரி மாவட்டத்தில் புதையல் இருப்பதாக ஒருவர் கடத்தப்பட்ட வழக்கில் காவல்துறையினர் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஜேசிபியில் தோண்டும் போது புதையல்..! பங்கு கேட்டு தொழில் அதிபரை கடத்திய பெண் இன்ஸ்பெக்டர்! கன்னியாகுமரி திகுதிகு!

கருங்கல் அருகே பாலப்பள்ளத்தைச் சேர்ந்தவர் ஜெர்லின் என்பவர் ஜே.சி.பி ஆபரேட்டராகப் பணிபுரிந்து வந்தவர். இவர் கடந்த ஆண்டு வங்கியில் கடன் வாங்கி ஜே.சி.பி. இயந்திரம், வீடு, கார் வாங்கி உள்ளார்.
ஜெர்லின் திடீர் பணக்காரர் ஆகிவிட்டதாக நினைத்த சிலர் அவர் ஜேசிபியால் பள்ளம் தோண்டும்போது புதையல் கிடைத்ததாகவும் அதனால் பணக்காரர் ஆகிவிட்டதாகவும் புரளி கிளப்பி உள்ளனர். இந்த தகவலை கேட்ட அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் சுரேஷ், காவல்துறையினர் உதவியுடன் ஜெர்லினை கடத்தியதாக கூறப்படுகிறது.
மனம்பாடு பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் ஜெர்லினை அடைத்து வைத்து புதையல் மூலம் கிடைத்த பணத்தை கேட்டுள்ளார் சுரேஷ். ஆனால் ஜெர்லினோ புதையல் எதுவும் கிடைக்கவில்லை. வங்கியில் கடன் பெற்று சொத்துக்கள் வாங்கியதாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் அவர் அணிந்திருந்த நகை, பணத்தை பறித்து கொண்டு சில பத்திரங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டு அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து குளச்சல் காவல்துறையிடம் ஜெர்லின் புகார் அளிக்க விசாரணையில் கருங்கல் காவல் ஆய்வாளர் பொன் தேவியின் தூண்டுதலில் கடத்தல் சம்பவம் நடந்ததாகத் தெரியவந்துள்ளது. இதையடுத்து கடத்தலுக்குத் தலைமைதாங்கிய சுரேஷ்குமார், ஜெயன்ராபி, கிருஷ்ணகுமார் கைது செய்யப்பட்டனர். கருங்கல் காவல் ஆய்வாளர் பொன் தேவி, காவலர்கள் ஜோன்ஸ், ரூபின் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.