வேலூர் தேர்தலில் மீண்டும் பண விளையாட்டு... தேர்தல் அதிகாரியிடம் சிக்கிய தி.மு.க. புள்ளி..! - தேர்தல் நிறுத்தப்படும் அபாயம்

வேலூரில் திமுக பிரமுகர் வீட்டில் இருந்து ரூ.27 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஏற்கனவே, வேலூர் மக்களவை தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திமுக மூத்த தலைவர் துரைமுருகனின் உதவியாளர் பூஞ்சோலை சீனிவாசனுக்குச் சொந்தமான குடோனில் இருந்து ரூ.10.57 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன்பேரில் உடனடியாக தேர்தலை ரத்து செய்வதாக, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. 

இந்நிலையில், ஆகஸ்ட் 5ம் தேதி வேலூர் மக்களவை தொகுதிக்கு, வாக்குப் பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில், மீண்டும் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோர் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில், வேலூர் தொகுதிக்கு உள்பட்ட அலமேலுங்காபுரம் புதுவசூரை சேர்ந்த ஏழுமலை என்பவரது வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டதாக, தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில், போலீசாருடன் வருமான வரித்துறை அங்கு வந்து அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, ஏழுமலை தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள குப்பை பகுதியில் பை ஒன்றை வீசியடித்துள்ளார். இதைப் பார்த்ததும்  அதிகாரிகள் ஓடிச் சென்று, அதனை எடுத்து ஆய்வு செய்துள்ளனர். அதில், ரூ.27 லட்சம் பணம் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். 

இதன்பேரில், ஏழுமலையிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவர் வேலூர் திமுக.,வில் முக்கிய பிரமுகராக உள்ள நடராஜன் என்பவரின் சகோதரர் ஆவார். எனவே, இந்த பணத்தில் திமுக.,வினருக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என கேள்வி எழுந்துள்ளது. இதனால்,மீண்டும் வேலூரில் தேர்தல் நடக்குமா இல்லையா என்ற சந்தேகம் நிலவுகிறது.