சைக்கிளில் வந்த சிறுவனிடம் ஹெல்மெட் கேட்டு ஃபைன் போட்ட போலீஸ்? வைரல் வீடியோவின் உண்மை இது தான்

தர்மபுரி மாவட்டத்தில் சைக்கிளில் ஹெல்மெட் போடாமல் வந்த சிறுவனை மடக்கிப் பிடித்து போலீசார் அறிவுரை கூறி அனுப்பும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் அவர்களின் பின் இருக்கையில் அமர்ந்து இருப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டம் அமலில் உள்ள நிலையில் இந்த மாதம் முதல் அதற்கான அபராத தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு போலீசார் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அபராத தொகையை வசூலித்து வருகின்றனர்.

இதையடுத்து தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அந்த வழியாக சைக்கிளில் வந்த ஒரு சிறுவனைப் பிடித்து அச்சிறுவனிடம் ஹெல்மெட் எங்கே என கேட்டு மிரட்டும் வீடியோ காட்சியானது அங்கிருந்த நபர்களால் எடுக்கப்பட்டு தற்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். 

மற்றும் இரு சக்கர வாகனத்தில் எவ்வாறு செல்ல வேண்டுமென அச்சிறுவனுக்கு அறிவுரை கூறியுள்ளனர். இதையடுத்து இருசக்கர வாகனத்தில் விதிகளை மீறி வருபவர்களுக்கு எவ்வளவு அபராத தொகை வசூலிக்கப்படும் எனவும் அவர்களுக்கான தண்டனைகள் குறித்தும் அச்சிறுவனுக்கு தெரிவித்துள்ளனர். அதன் பிறகு சிறுவனிடம் காவல்துறையினர் சைக்கிளை கொடுத்து அனுப்பி வைத்தனர்.