ராஜ்யசபா எம்பி பதவி முக்கியம் இல்லை! 8 வழிச்சாலை எதிர்ப்பில் உறுதி! கெத்து காட்டும் அன்புமணி!

அதிமுக கூட்டணியில் இருந்தாலும் சேலம் சென்னை பசுமை வழி சாலை திட்டத்தை தொடர்ந்து எதிர்ப்போம் என பாமக திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.


நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியில் பாமக இடம்பெற்றது. ஆனால் அக் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இது ஒருபுறமிருக்க சேலம் சென்னை பசுமை வழி சாலை திட்டத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்த பாமக, அதிமுக கூட்டணியில் இணைந்தது மக்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

திட்டத்திற்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் தடை விதித்தது. இதை எதிர்த்து தமிழக அரசானது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், பசுமை வழி சாலை திட்டத்தை பாமக ஆதரிக்குமா அல்லது எதிர்க்குமா என்ற கேள்விகள் எழுந்தன. இதற்கு பதில் அளித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், ஏற்கனவே சேலம் சென்னையை இணைக்க மூன்று நெடுஞ்சாலைகள் இருப்பதாலும் வாணியம்பாடி இருந்து சேலத்திற்கு ஒரு தேசிய நெடுஞ்சாலை இருப்பதாலும் 8 வழி பசுமை வழிச்சாலை என்பது தேவையற்றது என கூறியுள்ளார்.

இந்த திட்டத்தை எதிர்த்து பாமக தொடர்ந்து போராடும் என்றும் ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதே போல் அன்புமணியும் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார். அதிமுக - பாமக தேர்தல் உடன்பாட்டின் படி ஒரு ராஜ்யசபா எம்பி பதவியை அன்புமணிக்கு கொடுக்க வேண்டும்.

இந்த சூழலில் அதிமுகவின் கனவுத் திட்டமான 8 வழிச்சாலையை அன்புமணி எதிர்ப்பதால் அதிமுகவுடன் கூட்டணி முறிவு ஏற்பட்டு ராஜ்யசபா எம்பி பதவி கிடைக்காமல் போகலாம். ஆனாலும் கூட எட்டு வழிச்சாலை எதிர்ப்பில் உறுதியாக இருப்பதால் அன்புமணிக்கு எம்பி பதவி முக்கியம் இல்லை என்று மட்டும் தெரிகிறது.