பூடானுக்கு ரூ.4500 கோடி! கஜா பாதிப்புக்குள்ளான நமக்கு பட்டை நாமம்! மோடியின் ஓரவஞ்சனை அம்பலம்!

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு தற்போது வரை சல்லிக்காசு கூட ஒதுக்காத மோடி அரசு அண்டை நாடான பூடானுக்கு ரூ.4500 கோடியை அள்ளிக் கொடுத்துள்ளது.


பூடான் பிரதமராக அண்மையில் பதவி ஏற்றவர் லோட்டாய் ஷெரீங். இவர் தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வந்துள்ளார். குடியரசுர்த தலைவர் மாளிகையில் ஷெரீங்கிற்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு இந்திய பிரதமர் மோடி – பூடான் பிரதமர் லோட்டாய் ஷெரீங் இணைந்து இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர்.

   தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, பூடான் அரசின் 12வது ஐந்தாண்டுத் திட்டத்திற்கு இந்தியா நிதி உதவி வழங்கும் என்றார். அத்துடன் நான்காயிரத்து 500 கோடி ரூபாய் இதற்காக பூடானுக்கு கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் அண்டை நாடு, நீண்ட நெடுங்காலமாக இந்தியாவின் நட்பு நாடு, ஆகிய காரணங்களுக்காக பூடானுக்கு நிதி உதவி வழங்குவதில் யாருக்கும் ஆட்சேபனை இல்லை.

   ஆனால் பூடான் பிரதமர் எப்படி டெல்லியில் முகாமிட்டு அவர் நாட்டுக்கு நிதி உதவியை பெற்றுள்ளாரோ, இதே காரணத்திற்காக தான் கடந்த ஒரு மாதமாக தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் டெல்லியில் முகாமிட்டு கஜா புயல் நிவாரணத்திற்கு நிதி உதவி கோரி வருகின்றனர். புயல் கரையை கடந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. சேத விவரங்களை மத்திய குழு கணக்கெடுத்து முடித்தும் நான்கு வாரங்கள் நிறைவடையப்போகிறது.

   ஆனால் தற்போது வரை கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசிடம் இருந்து சல்லிக்காசு வந்து சேரவில்லை. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட இந்த விவகாரத்தில் தமிழகத்தை அலைய வைக்கும் போக்கில் தான் மத்திய அரசு செயல்படுவதாக தெரிகிறது. மத்திய அரசிடம் பணம் இருந்தும் கொடுக்க மனம் தான் இல்லை என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் பட்டவர்த்தனமாக தெரிவித்துவிட்டது.

   அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி மட்டும் அல்லாமல் தமிழகத்தின் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணனும் டெல்லியில் முகாமிட்டு மத்திய உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்தும் தமிழகத்தின் நிலவரத்தை எடுத்துக்கூறிவிட்டனர். ஆனால் இந்த விவகாரத்தில் கிணற்றில் போட்ட கல்லாக மத்திய அரசு நிதி உதவியை அறிவிக்காமல் தாமதித்து வருகிறது.

   மத்திய அரசுக்கு கிடைக்கும் வரி வருவாயில் மராட்டியத்திற்கு பிறகு அதிக தொகையை கொடுப்பது தமிழகம் தான். ஆனால் கஜா புயலால் வரலாறு காணாத பாதிப்பை சந்தித்துள்ள தமிகத்திற்கு தற்போது வரை மத்திய அரசு தனது பங்களிப்பாக எந்த உதவியையும் செய்யவில்லை. கேரளாவில் கனமழை கொட்டிய போது,மோடி நேரில் சென்று பார்வையிட்டார். உடனடியாக முதற்கட்ட நிவாரண தொகையையும் கேரளாவிற்கு விடுவித்தார்.

   ஆனால் தமிழகத்திற்கு முதற்கட்டமாக கூட எந்த நிதியும் மத்திய அரசிடம் இருந்து வரவில்லை. இந்த நிலையில் தான் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல மத்திய அரசு பூடானுக்கு 4500 கோடி ரூபாயை அள்ளி கொடுத்துள்ளது. இந்த தகவல் தமிழக மக்களுக்கு தெரிய ஆரம்பித்த உடனேயே அவர்கள் கேட்க ஆரம்பித்தது இதுதான், புயலால் பாதிக்கப்பட்ட நமக்கு தற்போது வரை சல்லிக்காசு வரவில்லை, ஆனால் பூடானுக்கு 4500 கோடியா? என்பது தான்.,

   இனியாவது விரைந்து செயல்பட்டு கஜா புயலுக்கான நிவாரண உதவியை மத்திய அரசு விரைந்து அறிவிக்க வேண்டும் என்பது தான் அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.