தமிழ்நாட்டில் பிள்ளையார் சதுர்த்தி என்றும் , மும்பையில் கனேஷ் சதுர்த்தி என்றும் சொல்லப்படும் இந்த விழாவின் பிறப்பிடம் மகாராஷ்ட்ரா.
பிள்ளையாரும் இந்திய சுதந்திரத்துக்குப் போராடி இருக்கிறார்! பொய் இல்லைங்க நிஜம்!
சிவாஜி காலத்தில் இந்த சதுர்த்தி வழிபாடு முதலில் துவங்கி இருக்கிறது. அதற்கு பிறகு மராட்டியத்தை ஆண்ட பேஷ்வாக்களின் காலத்தில் பிரபலமான விநாயகர் சதுர்த்தி 1818 முதல் மாநில அளவிலான விழாவாக இருந்தாலும்,1892 வரை அது வீடுகளுக்குள் கொண்டாடப்படும் விழாவகவே இருந்தது.
1893 ம் ஆண்டு 'லோகமான்ய' என்று அழைக்கப்பட்ட , பாலகங்காதர திலகர்தான் விநாயகரை வீதிக்குக் கொண்டு வந்தார்.அதற்கு இரண்டு காரணங்கள்.1857 ல் நடந்த முதல் சுதந்திரப் போருக்குப் பிறகு , மக்கள் பொது இடங்களில் மொத்தமக திரள்வதற்கு அரசு அனுமதி தராமல் தவிர்த்தது.
ஆனால் மதம் சார்ந்த விழாக்களுக்கு தடையில்லை.,இன்னொரு காரணம் ,அன்றைய இந்தியாவில் வாழ்ந்த இந்துக்களில் கிட்டத்தட்ட சரி பாதி மக்கள் கோவிலுக்குள் போய் தங்கள் தெய்வத்தை கும்பிட முடியாது.வாசலில் நின்று இருட்டான மூலஸ்த்தானத்தை நோக்கி குத்து மதிப்பாகத்தான் கும்பிட முடியும்.
இந்த இரண்டும்தான் பால கங்காதர திலகருக்கு வினாயகர் சதுர்த்தியை தெருவுக்கு கொண்டுவரும் யோசனையை கொடுத்தவை.பிள்ளையாரை நீங்களே உங்களுக்கு பிடித்த வடிவில் செய்து,உங்களுக்கு வசதியான இடத்தில் வைத்து பூஜை செய்யலாம் என்று அறிவித்தார். அப்போதுதான் ஒடுக்கப்பட்ட மக்கள் இந்த வழிபாட்டில் ஆர்வம் காட்டுவார்கள் என்ற திலகரின் திட்டம் வென்றது.
தெரு முனைகளிலும் , ஏழை எளிய மக்களின் வீடுகளிலும் பிள்ளையார் எழுந்தருளி மக்களுக்கு நெருக்கமான கடவுளானார்.அதன் தொடர்ச்சியாக பிள்ளையார்களைத் தூக்கிக் கொண்டு ஊர்வலமாக போய்,ஆறு,கடல் போன்ற நீர் நிலைகளில் கரைக்கும் ஊர்வலத்தை திரட்டுவதும்,அந்தக் கூட்டங்கள் ஜாதிகடந்த கூட்டமானது நிகழ்ந்தன.
அந்தக் கூட்டங்களில் ஆன்மீகத்தோடு அரசியலும் பேசப்பட்டது.அங்கிருந்துதான்,கர்நாடகா,ஆந்திரா மற்றும் தமிழகத்துக்கு பிள்ளையார் சதுர்த்தி பரவியது.இப்படி ,பால கங்காதர திலகரோடு சேர்ந்து இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த வரலாறு பிள்ளையாருக்கு இருக்கிறது.