தமிழ் மொழியை வெறுத்தாரா பெரியார்? இதோ அவரே என்ன சொல்லியிருக்கிறார் என்று பாருங்கள்!

தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என்பதுதான் பெரியாரின் நிலைப்பாடு என்று பலரும் சொல்வார்கள். தமிழ் மொழியை எளிமையாக்க பெரியார் ஆசைப்பட்டார். இன்று நாம் கணினியில் புழங்கும் எளிமையான எழுத்துக்கு வித்திட்டவர் பெரியார்தான்.


இந்தி புகுத்தப்பட்டபோது பெரியார் எப்படி முழங்கினார் தெரியுமா? ‘தமிழ் மொழி தாய்மொழியாக உள்ள இந்நாட்டில், இந்தியைப் புகுத்தக் கூடாது' என்று கிளர்ச்சி செய்தேன்.

அது என் தாய்மொழிப் பற்றுதலுக்காக என்று அல்ல; அது என் நாட்டு மொழி என்பதற்காக அல்ல; சிவபெருமானால் பேசப்பட்டது என்பதற்காக அல்ல; அகத்திய முனிவரால் திருத்தப்பட்டதென்பதற்காக அல்ல; மந்திர சக்தி நிறைந்தது; எலும்புக் கூட்டைப் பெண்ணாக்கிக் கொடுக்கும் என்பதற்காக அல்ல; பின் எதற்காக?

தமிழ் இந்நாட்டுச் சீதோஷ்ண நிலைக்கேற்ப அமைந்துள்ளது. இந்திய நாட்டுப் பிற எம்மொழியையும் விடத் தமிழ் நாகரிகம் பெற்று விளங்குகிறது. தூய தமிழ் பேசுதல் - மற்ற வேற்று மொழிச் சொற்களை நீக்கிப் பேசுவதால் நம்மிடையேயுள்ள இழிவுகள் நீங்குவதோடு, மேலும் மேலும் நன்மையடைவோம் எ‎ன்பதோடு, நம் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப நம் மொழி அமைந்திருக்கிறது.

வேறு மொழியைப் புகுத்திக் கொள்வதன் மூலம் நம் அமைப்பு கெடுவதோடு, அம்மொழியமைப்பிலுள்ள நம் நலனுக்குப் புறம்பான கருத்துகள் கேடுபயக்கும் கருத்துகள் நம்மிடையே புகுந்து நம்மை இழிவடையச் செய்கின்றன என்பதால்தான்.

வடமொழியில் நம்மை மேலும் மேலும் அடிமையாக்கும் தன்மை அமைந்திருப்பதால்தான் அதையும் கூடாதென்கிறேன். நமது மேன்மைக்கு, நமது தகுதிக்கு, நமது முற்போக்குக்கு ஏற்றமொழி தமிழைவிட மேலான ஒரு மொழி இந்நாட்டிலில்லை என்பதற்காகவே தமிழை விரும்புகிறேனே தவிர, அது அற்புத அதிசயங்களை விளைவிக்கக் கூடியது என்பதற்காக அல்ல - தந்தை பெரியார்.