இணைய வகுப்புகளால் ஆசிரியன் இறந்துவிட்டான்… பேராசிரியரின் வேதனை பதிவு.

இன்று பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இணையம் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த அவலத்தை வேதனையாக பதிவு செய்திருக்கிறார் பேராசிரியர் பிரபாகர் வேதமாணிக்கம்.


வகுப்பறை என்பது ஒரு நாடக அரங்கம் போன்றது. உயிருள்ள நடிகர்களும் உயிருள்ள பார்வையாளர்களும் பங்கு பெறும் நாடக அரங்கம் போலவே வகுப்பறையில் ஆசிரியரும் மாணவர்களும் உறவு கொள்கிறார்கள். என்ன ... நாடகத்தை சகிக்க முடியவில்லையென்றால் வெளியேறிவிடும் சுதந்திரம் பார்வையாளர்களுக்கு உண்டு.

வகுப்பறையில் கொடூரமான நடிகர்களைக் கூட சகித்தாகவேண்டிய கட்டாயம் மாணவர்களுக்கு உண்டு. பின்னாளில் வாழ்க்கையில் எல்லா கருமங்களையும் சகித்துக்கொள்ளும் இந்தியப்பிரஜைகள் இத்தகைய வகுப்பறைகளிலேயே உருவாக்கப்படுகிறார்கள். ஆனால் சொற்பமாகவேணும் நல்ல ஆசிரியர்களையும் சந்தித்துவிடும் யோகம் எல்லோருக்கும் வாய்த்துவிடவே செய்கிறது. அதனாலேயே எல்லா தொழில்நுட்ப சாத்தியங்களையும் கடந்து உயிருள்ள ஆசிரியன் தேவைப்படுகிறான்.

ஒரு வகுப்பறையில் 30, 40, 50 இப்போதெல்லாம் 70 ஜோடி கண்கள் ஒரு ஆசிரியனை கவனிக்கத் தொடங்குகின்றன. 50 நிமிடங்களும் தன்னைவிட்டு அகலமுடியாத கவன ஈர்ப்பை செய்யத்தக்க ஆசிரியர்களும் இருக்கவே செய்தனர். இன்றைய காட்சி யுகத்தில் ஒரு மனிதன், சில நொடிகளுக்கு மேல் ஒரு இலக்கின்மேல் தன் கவனத்தை இருத்தமுடியாதவனாகிவிட்டதாக ஊடக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடந்த சில பத்தாண்டுகளின் டிஜிட்டல் உலகத்தில் எங்கும் திருத்தப்பட்ட, மீ யாதார்த்த பிம்பங்கள் (manipulated, hyper real images) சூழ வாழும் ஒரு மாணவனின் கவனத்தை எளிய ஆசிரியன் இருத்துவதென்பது மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. 

இத்தகைய சூழலில் இந்த இணைய வகுப்புகள் உயர்கல்வியில் ஆகப்பெரும் நெருக்கடியாக மாறியுள்ளது. கடந்த வாரத்திலிருந்து இணைய வகுப்புகள் எடுக்கத் தொடங்கிய அனுபவம் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த மனச்சோர்வை உண்டாக்கிவிட்டது. இலக்கியத்தில் ‘ஆசிரியன் இறந்துவிட்டான்’ என்று ஒரு புகழ்பெற்ற கோட்பாடு உள்ளது.

ஒவ்வொரு இணைய வகுப்பு முடிந்தவுடன் என் உயிரற்ற சடலத்தைக் கடந்து வருவது போலவே தோன்றுகிறது. கொலையா? தற்கொலையா? என்றுதான் தெரியவில்லை. உண்மையில் மரபான வகுப்பறை ஆசிரியன் இறந்து விட்டதுபோலவே தோன்றுகிறது. அவனைப் பதிலீடு செய்ய ஒரு புதிய டிஜிட்டல் ஆசிரியன் பிறந்தாக வேண்டியிருக்கிறது.

ஆனால் எப்போதும் போலவே, எதுவுமே நடக்காததுபோல் நம் ஆசிரியப் பெருங்குடிகள் ‘எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது’ என்ற பாணியில் கணினித் திரைகளில் தங்கள் பேருரைகளை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள். வகுப்பறைகளில் செய்ததை அச்சுப்பிசகாமல் கேமராக்களின் முன்னல் செய்வது மிகுந்த அபத்தமாகத் தெரிகிறது.

நாம் சந்தித்தே ஆகவேண்டிய இந்த நெருக்கடியை சந்திப்பதற்கான எந்த முன் மாதிரிகளும் இல்லாத நிலையில் இச்சூழலை கையாள ஆசிரிய சமூகத்திற்கு நடப்பை மனதில்கொண்ட வழிமுறைகள் தேவைப்படுகின்றன. வாருங்கள். உரையாடிப்பார்க்கலாம். பிடித்துக்கொள்ள ஏதாவது கிடைக்கும்தானே!