மீண்டும் சிறைக்குப் போன பேரறிவாளன்..! கண்ணீருடன் அற்புதம்மாள்.

இரண்டு மாத பரோல் முடிந்து இன்று மீண்டும் சிறைக்குத் திரும்பியிருக்கிறார் பேரறிவாளன். இனிமேல் அவர்களுடைய விடுதலைக்கு வழியே இல்லை என்ற அளவுக்கு மத்திய அரசு நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துவிட்டது.


பேரறிவாளன் சிறைக்கு மீண்டும் செல்வது குறித்துப் பேசிய அற்புதம்மாள், ‘’என்னுடைய மகன் 29 ஆண்டுகளாக எந்த குற்றமும் செய்யாமல் சிறையில் இருக்கிறார். இந்த ஆண்டாவது எங்களுடன் பொங்கல் கொண்டாடுவார் என எதிர்பார்த்தோம். பரோல் நீட்டிப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தோம். 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உங்கள் மகன் உங்களிடம் திரும்புவார் என வாக்களித்தார். அந்த நம்பிக்கையில் தான் என் மகன் விடுதலை ஆவார் என எதிர்ப்பார்திருந்தேன். ஆனால் தற்போது பரோல் முடிந்து மீண்டும் சிறைக்கு செல்வது வேதனையாக உள்ளது. என் மகனுடைய வாக்குமூலத்தை மாற்றி அளித்துவிட்டேன் என வழக்கை விசாரித்த அதிகாரி தானாக முன்வந்து தெளிவு படுத்திவிட்டார். 

என் மகன் எந்த தவறும் செய்யாமல் 29 ஆண்டுகளாக சிறையில் அடைப்பட்டுள்ளார். குற்றமற்றவர் என்பதை நிரூபித்தும் அவருக்கு விடுதலை மறுக்கப்பட்டுள்ளது. என் மகன் விரைவில் விடுதலையாகி என்னுடைய கடைசி காலத்திலாவது என்னுடன் இருக்க வேண்டும்” என்று கண்ணீர் சிந்துகிறார்.

ஆட்சியாளர்கள்தான் மனது வைக்க வேண்டும்.