சாலையோரம் குவியல் குவியலாக கிடந்த முத்திரையுடன் கூடிய ஓட்டுச் சீட்டு! பெரம்பலூர் பரபரப்பு!

பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்குமுத்திரை பதியப்பட்ட வாக்குச்சீட்டுகள் சாலையோரத்தில் கிடந்ததால் பரபரப்பு நிலவியுள்ளது.


பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே சாலையோரத்தில் வாக்கு முத்திரை பதியப்பட்ட சீட்டுகள் சிதறிக் கிடந்ததை பார்த்த வாகன ஓட்டிகள் சிலர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தமிழகத்தில் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று அதன் வாக்கு எண்ணிக்கை முடிந்து தேர்வு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது குன்னம் அருகே சாலையோரத்தில் வாக்குச்சீட்டுகள் சிதறிக்கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் சிலர் சாலையில் வாக்குச்சீட்டு சிதறிக் கிடப்பதை பார்த்து உடனே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குன்னம் போலீசார் சிதறிக்கிடந்த வாக்குச்சீட்டுகளை கைப்பற்றி இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் முதல் கட்ட விசாரணையில் சாலையில் கீழே சிதறிக் கிடந்த வாக்குச்சீட்டுகள் மேலமாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்களின் சின்னங்கள் அடங்கியது என்பதை உறுதிசெய்தனர். இந்நிலையில் மேலும் இது குறித்து வேறு ஏதேனும் தகவல் கிடைக்குமா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வேட்பாளர்களின் சின்னங்கள் அடங்கிய வாக்குச்சீட்டுகளை இங்கு போட்டது யார்? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.