இன்று சென்னையை விட்டு எப்படி தப்பிச் செல்வது என்பதுதான் பெரும்பாலான சென்னை மக்களின் எண்ணமாக இருக்கிறது.
சென்னையில் இருந்து எஸ்கேப்..! தப்பிக்கும் மக்களை தடுக்கலாமா அரசு..?

வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை, போதிய சம்பளம் இல்லை, வெளியே வர அச்சம் இத்துடன் எதற்காக சென்னையில் வசிக்க வேண்டும் என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். சென்னையில் இருந்து செல்ல விரும்பும் குடிமக்களில் ஒருவரின் பதிவு இது.
புலம் பெயர்ந்தோர் தங்கள் ஊர்களுக்குச் செல்ல விருப்பம் தெரிவித்தபோது கொஞ்சம் கொஞ்சம் பேர்களாக சிறப்பு ரயில்களில் அனுப்பி வைத்ததைப் போலவே.. தற்போது சென்னையில் பெருகிவரும் கொரானா தொற்றின் அச்சத்தாலும், பாதிக்கப்பட்ட தங்கள் வாழ்வாதாரம் மீண்டும் எப்போது சீரடையும் என்கிற கேள்விக்கு விடை தெரியாததாலும்.. வீடுகளை காலி செய்துகொண்டு தங்கள் சொந்த ஊர்களுக்கோ அல்லது தாங்கள் பாதுகாப்பாக உணரும் ஊர்களுக்கோ மாறிச் செல்ல விரும்புபவர்களையும் கருணையுடன் அனுப்பி வையுங்கள்.
ஒருவர் தனது வாழ்க்கைச் சூழ்நிலையையே மாற்றிக்கொள்ள முடிவெடுப்பது எத்தனை வேதனையான விஷயம் என்று நினைத்துப் பார்க்க வேண்டும். எப்போது சரியாகும் என்று யாருக்குமே புரியாத புதிரான சூழ்நிலையில் மக்கள் தங்கள் தாய் தந்தையருடன் வாழ விரும்புவது நியாயமான விருப்பமே.
வருமானமும் இல்லாமல்.. வாடகை வீட்டிற்கு வாடகையும் தர முடியாத நெருக்கடியான சூழ்நிலையில்.. நோய் பயத்தையும் சுமந்தபடி இங்கேயேதான் இருந்தாக வேண்டும் என்று இந்த மக்களை வற்புறுத்துவதும் கருணையில்லாத செயலே. இப்படி வெளியேற விரும்புபவர்களை அனுமதிப்பதன் மூலம் சென்னையில் கொரானாப் பணியில் உள்ளவர்களுக்கு பணிச் சுமை குறையும்.
மற்ற மாவட்டங்களில் உள்ள மருத்துவ மனைகளில் பயன்படுத்தாத படுக்கைகள் அதிகம் இருப்பதால் படுக்கை கிடைக்காத பிரச்சினைகள் ஏற்படாமல் பல மாவட்டங்களிலும் உள்ள படுக்கைகளை அரசு பயன்படுத்த முடியும். தற்போது.. மரணம், திருமணம், மருத்துவம் மற்றும் வர்த்தக காரணங்களுக்காக மட்டுமே வெளியூர் செல்ல ஈ பாஸ் வழங்கப்படுகிறது.
அந்த விதியைத் தளர்த்தி புலம் பெயர விரும்பும் மக்களை அனுமதிக்கும் விதமாக மாற்றியமைக்க வேண்டும்.
அதே சமயம் எந்த நிபந்தனைகளும் இல்லாமல் அவர்களை அனுப்பவும் கூடாது.
1. அவர்கள் செல்லும் சமயம் ஏற்கெனவே மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டு நோய்த் தொற்று இல்லை என்று சான்று பெற்றிருக்க வேண்டும்.
2. அல்லது அவர்கள் செல்கிற ஊர்களின் எல்லையில் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதன் முடிவு பாசிடிவாக இருந்தால்.. அந்தப் பகுதியில் உள்ள மருத்துவ மனையில் சேர்க்கப்பட வேண்டும்.
3. நெகடிவாக இருந்தாலும் மற்றவர்களின் நலனுக்காக அவர்கள் தங்கும் இடத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளச் செய்ய வேண்டும்.
புலம் பெயர விரும்பும் மக்களை டோல்கேட்களில் நிறுத்தி திருப்பி அனுப்புவதை விடுத்து இந்த நிபந்தனைகளுடன் கெடுபிடிகள் இல்லாமல் அனுமதி அளிப்பதே அரசுக்கும் நல்லது. அவர்களுக்கும் நிம்மதி.