கொரோனாவை ஒரே பரிசோதனையில் கண்டுபிடிக்க முடியாது! பீலா ராஜேஷ் கிளப்பிய பீதி!

கரோனா அறிகுறி இருப்பவர்களில் முதல் பரிசோதனையில் தொற்று இல்லையென வந்தாலும்கூட அவர்களுக்கு மீண்டும் நோய்த்தாக்கம் ஏற்படாது என்பது உறுதி இல்லை என்று சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா இராஜேஷ் கூறியுள்ளார்.


அன்றாட நிலவரம் குறித்து சென்னையில் இன்று மாலையில் செய்தியாளர்களிடம் விவரித்தபோதே, அவர் இவ்வாறு கூறினார். முன்னதாக, அமைச்சர் விஜயபாஸ்கரின் டுவிட்டர் தகவல்களை அவர் விளக்கினார்.“ கொரோனா பெரிய ஆபத்தான நோய் அல்ல; எளிதாக சிகிச்சையளித்துவிட முடியும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இதுவரை ஒரே ஒருவர்தான் உயிரிழந்துள்ளார். மற்ற அனைவருமே திடமான நிலையில்தான் இருக்கிறார்கள். தீவிர சிகிச்சை தேவையில்லை. ஆபத்து இல்லை. தொற்று இருக்கிறவர்கள் யாராக இருந்தாலும் முன்வரவேண்டும். 20 நாள் தனிமைப்படுத்தல்தான்.. இதை யாரும் உளைச்சலுக்கு உள்ளாக்க வேண்டாம். சிலர் தனியார் சிகிச்சைக்குப் போக விரும்பினால் அனுமதிக்கப்படுகிறார்கள்.

டெல்லிக்குப் போனவர்களில் 303 பேருக்கு தொற்று இல்லையென உறுதியாகியுள்ளது. இன்று தாக்கம் அறியப்பட்டவர்களில் 100 பேர் டெல்லிக்குப் போய்வந்தவர்கள். ஒருவர், அமெரிக்காவிலிருந்து திரும்பியவர். இன்னொருவரின் பயண விவரத்தை அறியவேண்டி உள்ளது. கரோனா தொற்றுடையவர்கள், அவர்களின் தொடர்பு உடையவர்கள் அல்லாதவர்களிடமும் விவரம் எடுத்துவருகிறோம்.

தீவிரமான சுவாசப் பிரச்னை உள்ள 376 பேரின் விவரம் எடுத்திருக்கிறோம். இப்போதைக்கு இரண்டாவது கட்டம்தான். சமூகப் பரவல் நிலை இல்லை. நேற்றுவரை 10 ஆயிரம் பரிசோதனைக் கருவிகள் வசதி இருந்தது. மைய அரசின் உதவியோடு பலவகைகளில் அது அதிகரித்துவருகிறது. ” என்று பீலா கூறினார்.

டெல்லிக்குப் போய்வந்தவர்கள் 1,300 பேர் என முன்னர் அரசு கூறியதே; அங்கு 400 பேர் அங்கு சிகிச்சை பெற்றுள்ளனரே.. அவர்களில் இறப்பு ஏதும் உள்ளதா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ” 1,103 என்றுதான் சொன்னேன். அது இப்போது 1,200 பேர்கிட்ட வந்திருக்கிறது. “ என்று பதிலளித்தார், செயலாளர் பீலா.