ஒத்தசெருப்புக்காக கெஞ்சுகிறார் பார்த்திபன்! தியேட்டர்காரர்கள் மனம் இறங்குவார்களா!

சூப்பர் படம் என்று ரஜினிகாந்த் பாராட்டியதுமே, பார்த்திபன் படத்தைப் பார்க்கக்கூடாது என்று நிறைய பேர் முடிவு செய்திருப்பார்கள். ஏனென்றால் அவர் பார்த்துப் பாராட்டிய பரீட்சார்த்த படங்கள் எதுவுமே ஓடியதில்லை.


இப்போது ஒத்தசெருப்பு படத்துக்கு டிஜிட்டலில் நல்ல வரவேற்பு இருந்தாலும் தியேட்டர்களில் கூட்டம் இல்லை. போதிய ஆட்கள் இல்லை என்று ஷோவை கேன்சர் செய்கிறார்கள். அதனால் தியேட்டர்களுக்கு மனமுருகி ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார் பார்த்திபன். இதோ அந்த பதிவு.

‘‘திங்கட்கிழமை வேலைநாளில் கூட 12 பேர் பார்த்த திரையரங்குகளில் எல்லாம் 60 பேர் வந்துள்ளனர். ஒரு படம் பிக்-அப் ஆவதற்கு அந்தக் காலத்திலிருந்தே கொஞ்சம் நேரம் தேவை. இந்தப் படம் இப்போது தான் பிக்-அப்பாகியுள்ளது.

திங்கள், செவ்வாய், புதன் என அப்படியே ஏறும். வெள்ளிக்கிழமை வேறு படங்கள் வருகின்றன. ஆகையால் இந்தப் படத்தை உங்கள் குழந்தையாக எடுத்துக் கொண்டு, நண்பருடைய படம், உங்களுடைய படமாக நினைத்துக் கொள்ளுங்கள். இம்மாதிரியான கனவுப் படம் எப்போதாவது தான் வரும்.

இம்மாதிரியான படங்களுக்கு முதல் வாரம் பெரிதாக இருக்காது. அடுத்ததாக 3 படங்கள் வரும் போது, திரையரங்கு உரிமையாளர்களின் சூழல் தெரியும். ஆகையால், இந்தப் படத்துக்குக் கொஞ்சம் காட்சிகள் கொடுத்து, இன்னும் ஒரு வாரத்துக்குத் திரையிடுங்கள். இப்போது இருக்கும் திரையரங்குகளை அப்படியே கொடுத்துவிட்டீர்கள் என்றால், அதில் ஒவ்வொரு காட்சியை வேண்டுமானால் கட் பண்ணிக் கொள்ளுங்கள். ஏதாவது ஒரு வகையில் 2-ம் வாரமும் இந்தப் படமும் தாக்குப்பிடிக்க வேண்டும்.

நான் யாருக்குமே எதிரியல்ல. இந்தப் படத்தில் மூன்றாம் நபரின் பணமே கிடையாது. பணம் வந்தாலும் எனக்குத் தான், போனாலும் எனக்குத் தான். படத்தைப் பாருங்கள், அப்போது தான் இந்த மாதிரியான படமெல்லாம் 2-ம் வாரம் தான் பிக்-அப்பாகும் எனத் தெரியும். அது 'அன்னக்கிளி' ஆகவே இருந்தாலும் சரிதான்.

உங்களை வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். படத்தில் விஷயமுள்ளது என்பது மக்களுக்கு இப்போது தான் தெரிந்திருக்கிறது. இப்போது தான் வர ஆரம்பித்துள்ளனர். ஆகையால், அதற்காகக் கொஞ்சம் திரையரங்குகள் ஒதுக்கித் தரும்படி கேட்டுக் கொள்கிறேன். இந்த வாரமும் கூட்டம் குறைவாக இருந்தது என்றால், அப்புறமாக நீங்கள் படத்தை எடுத்துவிடலாம். மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் கூட்டம் நன்றாகவுள்ளது. மீதமுள்ள திரையரங்குகளில் சுமாராகவுள்ளது.

கொஞ்சம் நோஞ்சானாக இருக்கும் ஒருவனை அடித்து வீழ்த்தாமல், அவனுக்கான வாய்ப்பைக் கொஞ்சம் கொடுக்குமாறு ரொம்ப அன்போடு, தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன். அப்போது தான் என் இருப்பை இங்கு பதிவு செய்ய முடியும். மக்களிடம் ஒரு நல்ல படத்தைப் பார்க்க வைக்கப் போராடி வருகிறேன். திங்கள், செவ்வாய், புதன்கிழமைகளில் நாம் படம் பார்க்கவில்லை என்றால் முடியாது என்பது அவர்களுக்குத் தெரியாது. உங்களுக்குத் தெரியும்.

ஆகையால், என்னோட அன்பான அறிவான திறமையான மக்கள் விரும்பக் கூடிய குழந்தையை உங்களிடம் ஒப்படைத்திருக்கிறேன். தயவுசெய்து அதற்கு இன்னும் உயிர் கொடுக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்''.

இவ்வாறு பார்த்திபன் தெரிவித்துள்ளதற்கு ஏதாவது மரியாதை இருக்குமா என்பது வரும் வெள்ளிக்கிழமை தெரிந்துவிடும்.