பதஞ்சலி லேகியம் உயிருக்கு ஆபத்து! ஆதாரத்துடன் அம்பலமாக்கிய டாக்டர்!

இப்போது தெருவெங்கும் பதஞ்சலி பொருட்களுக்குத் தனியே மார்க்கெட் கிடைத்துள்ளது. இயற்கை பொருள் என்பதுடன் இந்தியாவில் தயாரானவை என்ற தனித்தன்மையும் மோடியின் ஆதரவும் இதனை மிகவும் பரபரப்பாக்கியுள்ளது. ஆனால், பதஞ்சலியில் விற்கப்படும் நெல்லிக்காய் லேகியம் குறித்து அதிர்ச்சியான கருத்துக்களைத் தருகிறார் டாக்டர் அன்புச்செல்வன். இதோ அவர் சொல்வதைக் கேளுங்கள்.


பதஞ்சலியில் விற்கப்படும் பொருள்களில் மலைநெல்லிக்களிம்பு அல்லது மிட்டாய் முக்கியமானவை. இந்தப் பொருள்களைப் பதப்படுத்த சோடியம் பென்சோயேட்டு என்னும் வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது என்ற சர்ச்சை எழுந்து சத்தமில்லாமல் அடக்கிவிட்டார்கள். ஏன் சோடியம் பென்சோயேட் பழவகைப் பொருள்களைப் பதப்படுத்துதலில் பயன்படுத்தக்கூடாது?

 புளிப்புச்சுவையுடைய/காய்/பழங்களில் அதிகம் இருப்பது விட்டமின் சி எனப்படும் அசுகாருபிக் அமிலம். இது ஒரு உயிர்வளி (ஆக்சிஜன்) ஒடுக்கி. அதாவது, அசுகாருபிக் அமிலத்துடன் வினைப்படும் பெரும்பாலான பொருள்கள் தம்மிடமுள்ள உயிர்வளியை இழந்துவிடும். இன்னும் விளங்கச் சொன்னால், அசுகாருபிக் அமிலம் தன்னுடன் வினைபுரியும் பொருள்களில் ஆக்சிஜன் அணுக்கள் இருந்தால் அதைப் பிடுங்கிக்கொள்ளும் வல்லமை பெற்றது. ஆகவே, நெல்லிக்காயிலிருக்கும் அசுகாருபிக் அமிலம் சோடியம் பென்சோயேட்டுடன் நாள்படப் பதப்படுத்தும் போது, சோடியம் பென்சோயேட்டில் உள்ள உயிர்வளியும், கரியும் சேர்ந்த கரியமிலத்தை உறிஞ்சி விடுவதால் வெறும் ஹைட்ரோகார்பனாகிய பென்சீன் மட்டுமே எஞ்சும். பென்சீன் என்பது பெட்ரோலிய எண்ணெயிலிருந்து எடுக்கப்படும் ஆறு கரியணுக்களைக் கொண்ட ஒரு வேதிப்பொருள். முதலாம் கரியும் ஆறாம் கரியும் இணைந்து அறுகோண வடிவில் இருப்பதால் இதனை வளையக்கரிமங்கள் எனப்படுகிறது. பெட்ரோலிலிருந்து வெளிவருகின்ற மணம் பென்சீன் உள்ளிட்ட வளையக்கரிமங்கள் இருப்பதால் தான்.

இந்தவகையான வளையக்கரிமச்சேர்மங்கள் நம் உடலில் இருக்கும் செல்களின் உட்கருவுக்குள் எளிதாகப் புகுந்து அங்கிருக்கும் டி.என்.ஏ.வின் வளர்ச்சியில் குறுக்கேசால் ஓட்டி புற்றணுக்களாக மாற்றிவிடுகின்றன. புகை பிடிப்பவர்களுக்கு, புகையிலையில் இருக்கும் நிக்கோட்டின் உண்டாக்கும் கேட்டைவிட, புகையில் இருக்கும், பென்சீன், தொலுயீன் போன்ற கரிமச்சேர்மங்கள் உள்ளிட்ட 3000க்கும் மேற்பட்ட வேதிப்பொருட்களால் தாம் உயிருக்கு அதிக கேடு என்கிறது அறிவியல் என்று ஆணித்தரமாக சொல்கிறார் டாக்டர்.