பாருங்கடா, பழைய பன்னீர்செல்வமா வரப்போறாரு... கொண்டாட்டத்தில் ஓ.பி.எஸ். கோஷ்டி

எடப்பாடியுடன் பன்னீர் இணைந்து துணை முதல்வர் ஆனதென்னமோ உண்மைதான். ஆனால், அவருக்கும் அவரது ஆட்களுக்கும் எங்கேயும் மரியாதை இல்லை என்பதை சொல்லவே வேண்டியதில்லை. அவரும் அடி வாங்கதவர் மாதிரி சிரித்துக்கொண்டே போய்க்கொண்டு இருக்கிறார்.


இந்த நிலையில், பன்னீர்செல்வம் நடவடிக்கையில் பெரும் மாற்றம் என்கிறார்கள். தேர்தல் நெருங்கும் சமயத்தில் நம்முடைய பலத்தைக் காட்டவில்லை என்றால், கட்சியில் இருந்தும் ஓரம் கட்டிவிடுவார்கள் என்று நினைக்கிறார். அதற்காக உடலையும் மனதையும் தேற்றிவருகிறாராம்,.

முதல்கட்டமாக உடலைத் தேற்றுவதற்காக பன்னீருக்கு கோவை கணபதியில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் ஆயில் மசாஜ், நீராவி மற்றும் எண்ணெய் குளியல் உள்பட பல்வேறு ஆயுர்வேத புத்துணர்வு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

உடல் புத்துணர்வு பெறுவதற்காக அவர் மேலும் சில நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சிகிச்சை முடிந்ததும் பன்னீர்செல்வம் வீரமாகப் பேசுவார், எடப்பாடியை லெப்ஃட் ரைட் வாங்குவார் என்றெல்லாம் பன்னீரின் வலது இடது கரங்கள் பேசிவருகிறார்கள்.

அப்படியெல்லாம் நடந்துவிடுமா, அத்தைக்கு மீசை முளைக்குமா என்று எடப்பாடி ஆட்களோ கிண்டல் செய்கிறார்கள்.